உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பள்ளிகளில் மாணவர்களை வேலை வாங்கக்கூடாது குழந்தைகள் உரிமை ஆணையம் கண்டிப்பு

 பள்ளிகளில் மாணவர்களை வேலை வாங்கக்கூடாது குழந்தைகள் உரிமை ஆணையம் கண்டிப்பு

கலபுரகி: பள்ளிகளில் பல்வேறு வேலைகளுக்கு மாணவர்களை பயன்படுத்துவதை, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கண்டித்துள்ளது. கர்நாடகாவின் பல்வேறு அரசு பள்ளிகளில், மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைப்பது, ஆசிரியர்களின் வாகனங்களை கழுவ வைப்பது, தண்ணீர் நிரப்ப வைப்பது என, பல வேலைகளை செய்ய வைக்கின்றனர். கல்வித்துறை பலமுறை கண்டித்தும், ஆங்காங்கே இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. அதேபோல, கலபுரகி மாவட்டத்தின் சித்தாபுரா, நால்வார், வாடி உட்பட சில இடங்களில் உள்ள பள்ளிகளில், மதிய உணவு தயாரிக்கும் சமையல் ஊழியர்களுக்கு உதவி செய்ய, மாணவர்களை பயன்படுத்துகின்றனர். தொலைவில் உள்ள இடங்களில் இருந்து, குடிநீர் கொண்டு வரவும் மாணவர்களை அனுப்புகின்றனர். வகுப்பு நடக்கும் நேரத்தில், மாணவர்களை பாடம் கேட்க விடாமல், வேறு வேலைகளுக்கு பயன்படுத்துவதை அறிந்த பெற்றோர், ஆசிரியர்களை கண்டித்துள்ளனர். கல்வித்துறைக்கும் புகார் அளித்துள்ளனர். இதையறிந்த குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் சசிதர் கோசும்பே, தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ளார். இது குறித்து, கலபுரகி மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரிக்கு கடிதம் எழுதி விளக்கம் கேட்டுள்ளார். கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: சில பள்ளிகளில் ஊழியர் பற்றாக்குறை இருப்பதால், மதிய உணவு தயாரிக்க காய்கறிகள் நறுக்குவது, குடிநீர் கொண்டு வருவது போன்ற பணிகளுக்கு, மாணவர்களை பயன்படுத்துவது, எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது. மாணவர்களை வேலை செய்ய வைப்பது சரியல்ல. மாணவர்கள் எந்த தொந்தரவும் இல்லாமல், கல்வி கற்க வேண்டும். பள்ளிகளில் தேவையான குடிநீர் வசதி செய்ய வேண்டும். இது தொடர்பாக, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும். மாணவர்களை இத்தகைய பணிகளை செய்ய வைக்கக்கூடாது என்ற விதிமுறை இருந்தும், அதை பின்பற்றாதது சரியல்ல. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ