200 வீடுகள் இடிப்பு விவகாரம்; குழந்தைகள் நல ஆணையம் கேள்வி
பெங்களூரு: கோகிலு லே - அவுட்டில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரத்தில், அந்த வீட்டில் வசித்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, ஜி.பி.ஏ.,விடம், மாநில குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை கேட்டு உள்ளது. பெங்களூரு பேட்ராயனபுரா தொகுதிக்கு உட்பட்ட கோகிலு லே - அவுட்டில், பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்துக்கு சொந்தமான, ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட, 200க்கும் மேற்பட்ட வீடுகளை, கடந்த 20ம் தேதி ஜி.பி.ஏ., எனும், கிரேட்டர் பெங்களூரு ஆணையம் இடித்தது. முன்அறிவிப்பு இன்றி வீடுகளை இடித்ததாகக் கூறி, பேட்ராயனபுரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வான, வருவாய் அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா வீட்டின் முன், பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தினர். வீடுகள் இன்றி நடுத்தெருவில் பெண்களும், குழந்தைகளும் வசிக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகின. நடுத்தெருவில் வசிப்பதால் குளிரால், 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து இந்த விவகாரம் குறி த்து, மாநில குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து, விசாரணையை ஆரம்பித்து உள்ளது. நடுத்தெருவில் வசிக்கும் குடும்பத்தினருக்கு மாற்று ஏற்பாடு செய்து தர, ஜி.பி.ஏ.,வுக்கு உத்தரவிட்டு இருப்பதுடன், குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கூறியுள்ளது.