உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சமூக சேவை செய்யும் சிறார்கள்

சமூக சேவை செய்யும் சிறார்கள்

– நமது நிருபர் – இன்றைய காலத்தில் குழந்தைகள் தாங்கள் சேர்த்து வைக்கும் பணத்தை வைத்து, தங்களுக்கு பிடித்தமான ஒன்றை வாங்கிக் கொள்வர். ஆனால், பன்ட்வாலை சேர்ந்த ஏழு சிறுவர்கள், சமூக சேவை செய்து வருகின்றனர். தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வால் தாலுகாவில் உள்ள சஜிபாபாடு கிராமத்தைச்சேர்ந்த ஏழு சிறுவர்களில், 6, 5, 4ம் வகுப்பு படித்து வரும் வைப், ஹர்திக், ஆதிப், ஸ்ரேயாஸ், சாத்விக் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர் துவக்க பள்ளி; கல்லட்காவில் உள்ள ஸ்ரீராம் வித்யாகேந்திராவில் அமோக், பனேமங்களூரில் உள்ள சாரதா உயர்நிலைப்பள்ளியின் ரிதேஷ் ஆகியோர் படித்து வருகின்றனர். இவர்கள் ஏழு பேரும் தசரா பண்டிகையின் போது, உள்ளூரில் மாறுவேடம் அணிந்து பணம் பெற்று, உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினர். இதற்காக தங்கள் பெற்றோரிடம் பணம் கேட்டு, அவர்களுக்கு மேலும் தொந்தரவு கொடுக்க கூடாது என்று முடிவு செய்தனர். இதையடுத்து, தங்கள் வீட்டில் இருந்த சாக்குப்பைகள், காலி டப்பாக்கள் மற்றும் பிற பொருட்களை பயன்படுத்தி, தங்களுக்கென புலி உடையை தயாரித்து உள்ளனர். முன்னர் தசராவின் போது, நான்கு வீடுகளுக்கு சென்று நடனமாடி, தாங்கள் சேகரித்த பணத்தை தங்கள் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தி வந்த இந்த குழந்தைகள், இம்முறை தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட பணத்தை சேகரித்தனர். தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்தாமல், விபத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த தங்கள் கிராமத்தை சேர்ந்த ஏழை மனிதருக்கு உதவ முடிவு செய்தனர். பெரியவர்களிடம் இருந்து எந்த வழிகாட்டுதலையும் கேட்காமல், அவர்கள் நேராக அந்த நோயாளியிடம் தாங்கள் சேகரித்த பணத்தை கொடுத்தனர். இதனால் அவர் முகத்தில் புன்னகை மலர்ந்தது. ஆரம்பத்தில் இவர்களின் சமூக செயல் பற்றி யாருக்கும் தெரியவில்லை. இருப்பினும் அவர்கள் கொடுத்த பணம் சமூக ஊடகங்களில் வைரலானபோது, கிராம மக்கள் உட்பட பெற்றோர் ஆச்சரியமடைந்தனர். சிறுவர்களின் கருணை உள்ளத்தை கண்டு அவர்களின் குடும்பத்தினரும், கிராம மக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். அந்த சிறுவர்களை வெளிப்படையாக பாராட்டினர். உள்ளூர்வாசிகள் கூறுகையில், ‘பண்டிகையின் போது தங்களுக்காக செலவு செய்யாமல், பிறரின் துன்பத்துக்கு உதவிய ஏழு சிறுவர்கள் தரும் செய்தி எளிதானது. பணம் குறைவாக இருந்தாலும், அதன் அர்த்தம் விலைமதிப்பற்றது. தசரா அன்று மங்களூரில் ஷார்துலா உடை அணிந்து நடனமாட வேண்டும் என்பதே அவர்களின் ஆசையாக இருந்தது. ‘ஆனால், அதற்காக உடை வாடகைக்கு எடுக்கவும், செலவழிக்கவும், அவர்களிடம் பணம் இல்லை. இருப்பினும் தங்கள் படைப்பாற்றலை கைவிடாத சிறுவர்கள், தங்கள் வீடுகளில் இருந்த சாக்கு பைகள், காலி டப்பாக்கள், விளையாட்டு பொருட்களை பயன்படுத்தி, தங்களுக்கென உடைகளை தயாரித்தனர்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை