சினிமா பாணியில் கதவை உடைத்து ஈ.டி., சோதனை
ஹூப்பள்ளி: சினிமா பாணியில் தொழிலதிபரின் வீட்டுக்கதவை உடைத்து, வீட்டுக்குள் நுழைந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ராஜஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் சமந்தர் சிங், ஹூப்பள்ளியின், தேஷ்பாண்டே நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இவர் கோவாவில், காசினோ எனும் சூதாட்ட விடுதி நடத்துகிறார். இலங்கை, துபாயிலும் இவருக்கு காசினோக்கள் உள்ளன. சமீபத்தில் இவர் தன் மகனுக்கு, ஆடம்பரமாக திருமணம் நடத்தினார். நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவிட்டிருந்தார். இதில் பாலிவுட் நடிகர், நடிகையர் பங்கேற்றனர். திருமணத்துக்கு முக்கிய புள்ளிகளை அழைத்து வர, ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர் இவ்வளவு கோடிகளை செலவிட்டதால், அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில், அவரது வீட்டை சோதனையிட, நேற்று காலையில் ஹூப்பள்ளியின், தேஷ்பாண்டே நகருக்கு வந்தனர். அதிகாரிகளை சமந்தர் சிங்கின் குடும்பத்தினர் உள்ளே விடவில்லை. கதவை தாழிட்டு கொண்டனர். அதிகாரிகள் பல முறை மன்றாடியும், கதவு திறக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் சினிமா பாணியில் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர். ஆவணங்களை கைப்பற்றினர். இவற்றை ஆய்வு செய்கின்றனர். அதிகாரிகளுக்கு பயந்து, குளியலறையில் பதுங்கியிருந்த சமந்தர் சிங்கை வெளியே வரவழைத்து விசாரிப்பதாக கூறப்படுகிறது.