உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  குடிநீர் பிரச்னை வராமல் பார்த்து கொள்ளுங்கள் கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

 குடிநீர் பிரச்னை வராமல் பார்த்து கொள்ளுங்கள் கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

பெங்களூரு: ''மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீருக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்,'' என, மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். பெங்களூரு விதான் சவுதாவில், கிராமங்கள், நகரங்களுக்கு குடிநீர் வினியோகிப்பது தொடர்பாக, மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரிகளுடன், முதல்வர் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார். மழை குறையும் அப்போது, முதல்வர் பேசியதாவது: நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை, வழக்கத்தை விட குறைவாக இருக்கும் வாய்ப்புள்ளதாக, மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்டில் வழக்கமான மழை பெய்யும். செப்டம்பரில் மழை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் இந்த சூழ்நிலை இருக்கலாம். எனவே குடிநீருக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு மாவட்ட கலெக்டர்களே பொறுப்பாளி. வருவாய்த்துறை, பஞ்சாயத்து ராஜ், நகர வளர்ச்சி துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். ஏப்ரல் முதல் ஜூன் வரை வட மாவட்டங்களில், வழக்கத்தை விட அதிகமான வெப்பக்காற்று வீசுக்கூடும். மக்கள் பாதிப்படையாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களுக்கு நிழல், குடிநீர் வசதி செய்ய வேண்டும். குடிநீர் வழங்குவதற்கு நிதி பற்றாக்குறை இல்லை. மாவட்ட கலெக்டர்களின் அறிக்கை அடிப்படையில், தேவையான நிதியுதவி வழங்கும்படி, நிதித்துறைக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் இருப்பு மாநிலத்தின் முக்கியமான, 14 அணைகளில், தற்போது 321.93 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவில் 36 சதவீதம் தண்ணீர் இருப்புள்ளது. கடந்தாண்டு இதே வேளையில், 330.35 டி.எம்.சி., தண்ணீர் இருந்தது. அணைகளில் குடிநீருக்கு தேவையான அளவு தண்ணீர் உள்ளது. மழைக்காலம் தாமதமாக ஆரம்பமாகும் அறிகுறி தென்படுகிறது. ஜூலை இரண்டாம் வாரம் வரை குடிநீர் இருப்பை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். விவசாயத்தை விட குடிநீருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அணைகளில் நீர் கசிவை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தொடர்பாக, மக்களின் புகார்களுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும். இதற்காக தாலுகா மற்றும் வார்டு அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க வேண்டும். மாவட்ட அளவில் செயற்படைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். போர் சூழ்நிலையால், இம்முறை உரம் வினியோகத்தில் பிரச்னை ஏற்படலாம். வியாபாரிகள் உரத்தை பதுக்கி வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் உரம் கிடைக்க வேண்டும். வேறு மாநிலங்களுக்கு உரம் அனுப்புவதை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு சித்தராமையா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை