உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசியலமைப்பை பாதுகாப்பது கடமை முதல்வர் சித்தராமையா அழைப்பு

அரசியலமைப்பை பாதுகாப்பது கடமை முதல்வர் சித்தராமையா அழைப்பு

பெங்களூரு: ''அரசியலமைப்பை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இதை அனைவரும் தவறாமல் நிறைவேற்ற வேண்டும்,'' என, முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்தார். பெங்களூரு விதான் சவுதா மாநாட்டு அரங்கில், சமூக நலத்துறை ஏற்பாடு செய்திருந்த சர்வதேச ஜனநாயக தின நிகழ்ச்சியை நேற்று முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது: நாட்டில் பல்வேறு ஜாதிகள், மதங்கள் உள்ளன. பன்முக கலாசார நாட்டில், வேற்றுமையில் ஒற்றுமையை காண்பதற்காகவே, ஜனநாயக அமைப்பு கொண்டு வரப்பட்டு உள்ளது. ஜாதிகளால் சமத்துவமின்மை எழுந்துள்ளது. 'நாம் முரண்பாடுகள் நிறைந்த சமூகத்தில் இருக்கிறோம்; சமூகம், அரசியல், பொருளாதாரம், கல்வியிலும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன' என, அம்பேத்கர் கூறினார். நாட்டு மக்கள் சமூக, கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரத்தை பெறும்போது தான் சுதந்திரம் பூர்த்தி பெறும். பசவண்ணர் 12ம் நுாற்றாண்டில் அனுபவ மண்டபத்தை நிறுவி, ஜனநாயகம் என்ற கருத்தை உயிர்ப்பித்தார். தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த அல்லம்மா பிரபுவை அனுபவ மண்டபத்தின் தலைவராக்கினார். நம் ஜாதி அமைப்பு சமூகத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளது. பொருளாதாரம், ஜாதிகள் இடையே சமத்துவத்தை கொண்டு வராமல், ஜாதியை ஒழிக்க முடியாது. அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைத்தால் மட்டுமே மாற்றம் சாத்தியமாகும். இன்றைய கொண்டாட்டத்தின் முழக்கம், 'என் ஓட்டு, என் உரிமை'. முன்னர் பணக்காரர்களுக்கு மட்டுமே அதிகாரம் இருந்தது. தற்போது பணக்காரர், ஏழை என்று வேறுபாடு இல்லாமல், அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டு உள்ளது. அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள, ஓட்டு மோசடி எனும் வழியை கையில் எடுத்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், ஓட்டுகளை தவறாக பயன்படுத்த கூடாது; ஓட்டு மோசடியை அனுமதிக்காதீர்கள். அரசியல் அமைப்பை தவறாக பயன்படுத்தி, அதை பலவீனப்படுத்தும் தந்திரம் தடுக்கப்பட வேண்டும். அரசியலமைப்பை பாதுகாப்பது அனைத்து குடிமக்களின் பொறுப்பு. சுதந்திரம் பெற்றதில் இருந்து அரசியல் அமைப்பை எதிர்ப்பவர்கள் உள்ளனர். சமத்துவமின்மை ஒழிக்கப்பட்டால் மட்டுமே, சுரண்டுவது நிறுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை