தேவகவுடா இரட்டை நிலைப்பாடு முதல்வர் சித்தராமையா கேள்வி
ஹாவேரி: ''பா.ஜ.,வுடன் கூட்டணி வைப்பதற்கு முன் முன்னாள் பிரதமர் தேவகவுடா என்ன பேசினார், இப்போது பிரதமர் நரேந்திர மோடியை பற்றி என்ன பேசுகிறார். இது இரட்டை நிலைப்பாடு இல்லையா?,'' என்று முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.ஹாவேரி மாவட்டம், ஹனகல்லில், நேற்று 650 கோடி ரூபாய்க்கான நலப்பணி திட்டத்தை முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.சுகாஸ் ஷெட்டியை கொல்ல, பாசில் என்பவர், அடிலுக்கு கூலி கொடுத்த சம்பவம் தொடர்பாக, அமைச்சர்கள் பரமேஸ்வர், தினேஷ் குண்டுராவ் மங்களூரு சென்றுள்ளனர். அவர்களிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சமூக விரோத சக்திகளை கட்டுப்படுத்தவும், கண்டறியவும் சிறப்பு பிரிவை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.எங்கள் அரசு வந்து இரண்டு ஆண்டுகள் குறிக்கும் வகையில், விஜயநகரில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறோம். இந்த சந்தர்ப்பத்தில் எங்கள் சாதனைகள் குறித்து, மாநில மக்களுக்கு தெரிவிப்போம்.ஜாதிவாரி கணக்கெடுப்பை, பா.ஜ., விமர்சிக்கிறது. ஜாதிகள் இடையே தீயை மூட்டி விடுவதாக எங்கள் மீது குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், இப்போது அவர்களே ஜாதிவாரி கணக்கெடுப்பை வரவேற்கின்றனர்.பாகிஸ்தான் விஷயத்தில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறுகிறார். பா.ஜ.,வுடன் அவர் கூட்டணி வைப்பதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடியை பற்றி அவர் என்ன பேசினார்; இப்போது என்ன பேசுகிறார். இது தேவகவுடாவின் இரட்டை நிலைப்பாடு இல்லையா.இவ்வாறு அவர் கூறினார்.