கத்தாரில் இருந்து கடத்திய ரூ.40 கோடி கோகைன் பறிமுதல்
தேவனஹள்ளி: கத்தாரில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 40 கோடி ரூபாய் மதிப்பிலான கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவரை கைது செய்யப்பட்டார்.மத்திய கிழக்கு நாடான கத்தாரின் தோஹாவில் இருந்து, பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு விமானம் தரையிறங்கியது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், போதைப் பொருள் கடத்தி வருவதாக, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.விமானத்தில் வந்த பயணியர் சோதனை செய்யப்பட்டனர். ஒரு ஆண் பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, இரண்டு புத்தகங்கள் இருந்தன. ஆனால் அந்த புத்தகங்கள் எடை அதிகமாக இருந்ததை அதிகாரிகள் உணர்ந்தனர்.புத்தகங்களின் அட்டை பகுதியை கிழித்து பார்த்தபோது, அதற்குள் வெள்ளை நிற பவுடர் இருந்தது. அந்த பவுடரை பரிசோதித்தபோது, கோகைன் என்பது தெரிய வந்தது.மொத்தம், 4 கிலோ 6 கிராம் கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன்மதிப்பு 40 கோடி ரூபாய். பயணியிடம் விசாரித்தபோது, கத்தாரில் இருந்து கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார். பயணி மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவாகி உள்ளது. பயணியின் பெயர், விபரங்கள் வெளியிடப்படவில்லை.