சித்தராமையா - சிவகுமார் இடையே மீண்டும்... பனிப்போர்!; வாரிய பதவிகளை ஆதரவாளர்களுக்கு வழங்க போட்டி
கர்நாடகாவில் பல்வேறு கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவர், துணை தலைவர்கள் பதவிகள் நிரப்பப்படாமல் இருந்தன. பதவியை எதிர்பார்த்து, காங்கிரஸ் பிரமுகர்கள் காத்திருந்தனர். இது தொடர்பாக, ஆலோசனை நடத்த முதல்வரும், துணை முதல்வரும் பல முறை டில்லிக்கு சென்று வந்தனர். ஆயினும் நியமன பட்டியல் தயாரிப்பது, பெரும் தலைவலியாக இருந்தது. முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் தங்கள் ஆதரவாளர்களை நியமிக்க, ஆர்வம் காட்டினர். இதற்கிடையே மழைக்கால கூட்டம், ஜாதிவாரி சர்வே, வெள்ள பாதிப்பு உட்பட பல்வேறு காரணங்களால் கார்ப்பரேஷன், வாரியங்கள் நியமனம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. பல தடைகளை கடந்து, 39 வாரியங்களுக்கு தலைவர்கள், துணைத் தலைவர்களை நியமித்து, பட்டியல் தயாரித்தது. இதற்கு காங்கிரஸ் மேலிடம் கிரீன் சிக்னல் காட்டியது. அதிகாரப்பூர்வமாக நியமன உத்தரவை வெளியிட உள்ள நிலையில், 39 பேர் கொண்ட பட்டியலில் இருந்து, ஏழு பேரை முதல்வர் சித்தராமையா நீக்கியுள்ளார். கல்யாண கர்நாடக போக்குவரத்து கழகத்துக்கு நியமிக்கப்பட்ட நீலகண்ட முல்கே, வெப்ப நிலை வாரியத்துக்கு நியமிக்கப்பட்ட சத்யநாராயணா, பருப்பு வகைகளின் மேம்பாட்டு வாரியத்தின் சையத் மெஹமூத் சிஸ்டி, துவரம் பருப்பு மேம்பாட்டு வாரியத்தின் அனில்குமார்ஜமாதார், சுண்ணாம்பு மேம்பாட்டு வாரியத்தின் கவலகி, விதைப்பொருள் மேம்பாட்டு வாரியத்தின் அஞ்சனப்பா, விவசாய பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி வாரியத்துக்கு நியமிக்கப்பட்ட சரணப்பா சலாத்புரா உட்பட, ஏழு பேரின் பெயர்களை நீக்கியுள்ளார். இந்த ஏழு இடங்களில், தங்களின் ஆதரவாளர்களை அமர்த்த முதல்வரும், துணை முதல்வரும் முயற்சிக்கின்றனர். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடராஜ் கவுடா, எம்.எல்.சி., பதவிக்காக முயற்சித்தார். அது கிடைக்காத காரணத்தால், வாரிய தலைவர் பதவி மீது கண் வைத்துள்ளார். இவர் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவர். இவரை கர்நாடக தொழில் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு கழக தலைவர் பதவியில் அமர்த்த, முதல்வர் விரும்புகிறார். ஆனால் துணை முதல்வர் சிவகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., நஞ்சைய்யாவை தேர்வு செய்துள்ளார். நஞ்சைய்யா, தொழிற் துறை எம்.பி.பாட்டீலின் ஆதரவாளர். கர்நாடக ஒக்கலிகர் மேம்பாட்டு வாரிய தலைவர் பதவி யை, நடராஜ்கவுடா எதிர்பார்க்கிறார். ஆனால் இந்த பதவியை, மாண்டியாவின் முன்னாள் அமைச்சர் ஆத்மானந்தாவுக்கு வழங்க, துணை முதல்வர் விரும்புவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற மற்ற வாரியங்களின் தலைவர் பதவிகளும் இழுபறி நிலை யில் உள்ளது. பெங்களூரு மாநகராட்சி தற்போது ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையமாக மாறியுள்ளது. ஐந்து மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு இறுதிக்குள் தேர்தல் நடந்தால், ஐந்து மாநகராட்சிகளையும் காங்கிரஸ் வசமாக்குவது, முதல்வர், துணை முதல்வரின் எண்ணமாகும். தங்களின் ஆதரவாளர்களை கவுன்சிலர், மேயர் பதவிகளில் அமர்த்த, முதல்வரும், துணை முதல்வரும் இப்போதிருந்தே திட்டமிட்டுள்ளனர். 'மாஜி' கவுன்சிலர்கள், கவுன்சிலர் சீட் பெற விரும்பும் தலைவர்கள், தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள வார்டுகளில், நற்பணிகளை செய்து மக்களுக்கு நெருக்கமாகின்றனர். இது, வரும் நாட்களில் தங்களின் வெற்றிக்கு உதவும் என்பது, இவர்களின் திட்டமாகும்.