மைசூரு தசராவில் நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
மைசூரு : ''மைசூரு தசராவின்போது நெரிசல் ஏற்படும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி அறிவுறுத்தி உள்ளார். மைசூரு தசராவை முன்னிட்டு, கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக, மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தை கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி தலைமையில் நேற்று முன்னேற்பாடு கூட்டம் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: யுவ தசரா, அரண்மனை நிகழ்ச்சிகள், கண்காட்சி மைதானங்களில் அதிகளவில் மக்கள் கூடுவர். இப்பகுதிகளில் கூடுதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகழ்ச்சிகள் நடக்கும் நாள், நேரம், இடம் போன்றவை பொது மக்களுக்கு தெரியப்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். கூட்ட நெரிசல் ஏற்படும் ஆபத்தான இடங்களை கண்டறிந்து, தகுந்த நடவடிக்கை எடுங்கள். கூட்ட நெரிசல் ஏற்படாமல் போலீசார் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.