பெங்களூரு: கன்னடத்தில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் உமேஷ், 80, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலமானார். மைசூரில் 1945 ஏப்., 24ல் பிறந்தவர் உமேஷ், 80. கடந்த, 1960ல் பி.ஆர்.பந்துலு இயக்கிய மக்கள் ராஜ்யம் என்ற படத்தின் மூலம் திரையுலக பயணத்தை துவக்கினார். அதன் பின் தொடர்ந்து 60 ஆண்டுகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் துணை கதாபாத்திரம், நகைச்சுவை என பல்வேறு வேடங்களில் நடித்து, மக்களின் மனதில் இடம் பிடித்தார். இதில், குரு சிஷ்யரு, அனுபமா, கமனா பில்லு, அபூர்வ சங்கம், ஸ்ருதி செராயிடா, ஹாலு சக்கரா, கோல்மால் ராதாகிருஷ்ணா, மலையா மருது, கஜபதி கர்ப்பங்கா உட்பட பல படங்கள் அவரின் நடிப்புக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன. 1975ல் கதா சங்கமா என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு துணை நடிகருக்கான, 'கர்நாடக மாநில விருது' வழங்கப்பட்டது. சமீபத்தில் கூட அவர் நடித்த கமல் ஸ்ரீதேவி, ஐ ஆம் காட் ஆகிய படங்கள் வெளியாகின. கடந்த அக்டோபரில் வீட்டில் குளியல் அறையில் வழுக்கி விழுந்த அவர், கித்வாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது, நான்காம் நிலை கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. கீமோதெரபி, இம்யூனோதெரபி மூலம் குணமடைய வாய்ப்பு உள்ளது என்று டாக்டர்கள் கூறினர். இதையறிந்த திரையுலகினர் பலரும், மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். இந்நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் அசோக், மத்திய அமைச்சர் குமாரசாமி உட்பட பலர் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் சித்தராமையா ஜெ.பி., நகரில் உள்ள உமேஷ் இல்லத்துக்கு சென்று, அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார். பின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.