கட்டளை மைய வாகனம் ஹூப்பள்ளியில் அறிமுகம்
ஹூப்பள்ளி: விமான விபத்துகளை தடுக்கும், கட்டளை மைய திறன் கொண்ட வாகனம், ஹூப்பள்ளி விமான நிலையத்தில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. கர்நாடகாவின் ஹூப்பள்ளி விமான நிலையத்தில், நடமாடும் கட்டளை மைய வாகனம் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. இந்த வாகனத்தில் அதிகாரிகள் அமர்ந்தபடியே, ஆலோசனை கூட்டங்கள் நடத்தும் வசதி உள்ளது. இது குறித்து, ஹூப்பள்ளி விமான நிலைய இயக்குநர் ரூபேஷ் குமார் கூறியதாவது: விபத்து ஏற்படுவதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை, இந்த வாகனத்தில் இருந்தபடியே அதிகாரிகளால் உத்தரவிட முடியும். மாநிலத்திலேயே முதல் முறையாக, ஹூப்பள்ளி விமான நிலையத்தில், நடமாடும் கட்டளை மைய வாகனம் அறிமுகமாகி உள்ளது. இந்த வாகனம் இரவிலும் இயங்கும் திறனுடையது. வாகனத்தில் அமர்ந்தபடியே விமான நிலையத்தில் உள்ள அனைத்து துறைகளின் அதிகாரிகளையும் தொடர்பு கொள்ளலாம். இந்த வாகனத்தை உருவாக்க, 1 கோடி ரூபாய் செலவானது. இவ்வாறு அவர் கூறினார்.