கமிஷனர் - ஊழியர்கள் மோதல் நிர்வாக அதிகாரி சமாதான பேச்சு
பெங்களூரு: ஜி.பி.ஏ., கமிஷனர் முனிஷ் மவுட்கில் - ஊழியர்கள் இடையே நடக்கும் மோதலை சரி செய்யும் முயற்சியில், நிர்வாக அதிகாரி துஷார் கிரிநாத் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தில், வருவாய் கமிஷனராக பணியாற்றுபவர் முனிஷ் மவுட்கில். இவருக்கும், வருவாய் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும் கடந்த சில நாட்களாக மோதல் நடந்து வருகிறது. கமிஷனர் அநாகரீகமாக பேசுவதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என, துணை முதல்வர் சிவகுமாருக்கு ஊழியர்கள் கடிதம் எழுதினர். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை என கமிஷனர் மறுப்பு தெரிவித்து உள்ளார். இந்நிலையில், கமிஷனர் மற்றும் ஜி.பி.ஏ., ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் சமாதானம் பேசும் முயற்சியில், நகர்ப்புற மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலரும், ஜி.பி.ஏ., நிர்வாக அதிகாரியுமான துஷார் கிரிநாத் ஈடுபட்டு உள்ளார். ஜி.பி.ஏ., ஊழியர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு உள்ளார். இது குறித்து, நடவடிக்கை எடுப்பதாகவும், கமிஷனரிடம் கலந்து பேசுவதாகவும் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. துஷார் கிரிநாத் ஏற்கனவே பெங்களூரு மாநகராட்சியின் தலைமை கமிஷனராக பொறுப்பு வகித்தவர். இதனால், இவருக்கு வருவாய் துறையில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களை நன்கு தெரியும். இதனால், சமாதான பேச்சுக்கு அவர் தயாராகி வருகிறார்.