முருகா மடத்தின் சொத்துகளை விற்றதாக மடாதிபதி மீது புகார்
சித்ரதுர்கா: போக்சோ வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள முருகா சரணரு, சட்டவிரோதமாக மடத்தின் சொத்துகளை விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சித்ரதுர்காவில் உள்ள முருகா மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் முருகா சரணரு. இவர் மடத்தின் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இரண்டு மாணவியர், மைசூரின் ஒடனாடி அமைப்பின் உதவியுடன், நஜர்பாத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த வழக்கு, சித்ரதுர்கா போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீசார் தனித்தனியாக இரண்டு வழக்குகள் பதிவு செய்தனர். முருகா சரணரும் கைது செய்யப்பட்டார். போக்சோ வழக்கில் கைதான இவர், மடத்தின் நிர்வாகத்தில் தலையிட கூடாது என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே மடத்தை நிர்வகிக்க, மாநில அரசு சிவயோகி தலைமையில், நிர்வாக கமிட்டி அமைத்தது. இரண்டு வழக்குகளில், ஒரு வழக்கில் இருந்து, முருகா சரணரு விடுவிக்கப்பட்டார். மற்றொரு வழக்கு விசாரணை கட்டத்தில் உள்ளது. இதற்கிடையே இவர் மீது, மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மடத்தின் நிர்வாகத்தில் தலையிட கூடாது என, உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் முருகா சரணரு, நடப்பாண்டு அக்டோபர் 6ல், சித்ரதுர்கா மாவட்டம், ஹொசதுர்காவில் உள்ள மடத்துக்கு சொந்தமான, இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு மனைகளை, மஞ்சுநாத் என்பவர் மூலமாக விற்பனை செய்துள்ளார். மடத்தின் நிர்வாக கமிட்டியின் கவனத்துக்கு வராமல், மடத்தின் சொத்துகளை விற்றது சட்டவிரோதம், முருகா சரணரு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி, மடத்தின் பக்தர் பிரகாஷ், நிர்வாக கமிட்டி தலைவர் சிவயோகி களசத்திடம் புகார் அளித்துள்ளார். இது பற்றி விசாரித்து, நடவடிக்கை எடுப்பதாக கமிட்டி தலைவர் கூறியுள்ளார்.