உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / டி.சி.சி., வங்கி இயக்குநர் தேர்தல் வரிந்து கட்டும் காங்., கோஷ்டிகள்

டி.சி.சி., வங்கி இயக்குநர் தேர்தல் வரிந்து கட்டும் காங்., கோஷ்டிகள்

கோலார், சிக்கபல்லாபூர் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் பதவியை பிடிக்க, இயக்குநர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு காங்கிரசின் இரு கோஷ்டிகள் வரிந்து கட்டி களத்தில் இறங்கி உள்ளன. கோலார், சிக்கபல்லாபூர் மாவட்ட கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநர்கள் 18 பேரை தேர்வு செய்வதற்காக வரும் 28 ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது. இன்று மாலை 3:00 மணி வரை மனு மனு தாக்கல் செய்யலாம்.நாளை, வேட்புமனு மீது பரிசீலனை. 23ம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள். 28ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கோலார் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. அன்றைய தினமே ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. 29 ம் தேதி தேர்தல் கால பணிகள் நிறைவு பெறும்.

42 பேர் மனு

இந்த இயக்குநர்களின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள். இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தங்கவயல் -ரூபகலா, கோலார் கொத்துார் மஞ்சுநாத், பாகேபள்ளி- சுப்பா ரெட்டி, டி.சி.சி., வங்கியின் தற்போதைய தலைவர் பைலஹள்ளி கோவிந்தகவுடா உட்பட 42 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று மனு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை தெரிய வரும். தேர்தலில் வெற்றி பெறும் 18 இயக்குநர்களில் ஒருவர், டி.சி.சி., வங்கி தலைவராக தேர்வு செய்யப்படுவார்.

வரிந்து கட்டும் அணிகள்

காங்கிரசில் இரு கோஷ்டிகள் உள்ளன. இந்த இரு கோஷ்டிகளும் தேர்தல் களத்தில் உள்ளன. இதில் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத், அமைச்சர் சுதாகர், எம்.எல்.சி., அனில் குமார் ஆகியோர் ஒரு அணியிலும்; எம்.எல்.ஏ.,க்கள் ரூபகலா, எஸ்.என்.நாராயணசாமி, பைலஹள்ளி கோவிந்த கவுடா ஒரு அணியாகவும் எதிரும் புதிருமாக மோதுகின்றனர். பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

தேர்தல் நடத்தாதது ஏன்?

கடந்த ஐந்து ஆண்டுகளில் டி.சி.சி., வங்கி நிர்வாக தலைவராக பதவியில் உள்ளவர் பைலஹள்ளி கோவிந்த கவுடா. இவர், தன் அதிகாரத்தை பயன்படுத்தி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டி இல்லா கடனை அள்ளி வழங்கியதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் ஆளுங்கட்சியான காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த.,வினர் குற்றம் சாட்டி உள்ளனர்.இதனால், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2023 செப்டம்பர் 27 ல் முறையாக நடக்க வேண்டிய தேர்தல், சட்ட பிரச்னையால் தள்ளி போடப்பட்டது. ஆயினும் 2024 ஜனவரி- 1 முதல் 2024 டிசம்பர் 31 வரை நிர்வாக அதிகாரியை அரசு நியமித்து, அதன் கட்டுப்பாட்டில் இயங்க வைத்தது. இதனால், 20 மாதங்கள் தேர்தல் நடத்தப்படவில்லை. நீதிமன்ற விசாரணைக்கு பின், தேர்தலை நடத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி வரும் 28ம் தேதி நடத்தப்படுகிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை