உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  உத்தர கன்னடா மாவட்ட வளர்ச்சி கூட்டத்தில் அமைச்சருடன் காங்., - எம்.எல்.ஏ., மோதல்

 உத்தர கன்னடா மாவட்ட வளர்ச்சி கூட்டத்தில் அமைச்சருடன் காங்., - எம்.எல்.ஏ., மோதல்

கார்வார்: மாவட்ட வளர்ச்சி கூட்டத்தில் அமைச்சர் மங்கள் வைத்யா, காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைல் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. கோபத்தில் கூட்டத்தில் இருந்து, எம்.எல்.ஏ., பாதியில் வெளியேறினார். உத்தர கன்னடா மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் தொடர்பாக, மாவட்ட பொறுப்பு அமைச்சர் மங்கள் வைத்யா தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது. கலெக்டர், அனைத்து துறைகளின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கார்வார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைல் பேசும் போது, ''என் தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில், டாக்டர்கள், மருந்துகள் பற்றாக்குறை உள்ளது,'' என்றார். இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகளிடம் அமைச்சர் கேள்வி எழுப்பிய போது, எம்.எல்.ஏ., கூறியதை மறுத்தனர். மருத்துவமனைகளுக்கு சரியான நேரத்தில் மருந்து, மாத்திரைகள் அனுப்பி வைக்கப்படுவதாக கூறினர். அதனை ஏற்க மறுத்த எம்.எல்.ஏ., அதிகாரிகள் பொய் பேசுவதாக கூறினார். இதைக்கேட்டு கோபம் அடைந்த அமைச்சர், 'அப்படி என்றால் உங்கள் தொகுதிக்கு டாக்டர்களை நீங்களே அழைத்து வாருங்கள்' என்று கூறியதுடன், எம்.எல்.ஏ.,வை கிண்டல் அடிக்கும் வகையில் நக்கலாக சிரித்தார். இதனால், கடுப்பான எம்.எல்.ஏ., அமைச்சரை பார்த்து, 'நீங்கள் கூறுவதை மட்டும் கேட்கும் நபர் நான் இல்லை. மக்கள் தங்கள் குறைகளை என்னிடம் கூறினர். நான் இங்கு வெளிப்படுத்தி உள்ளேன். என் தொகுதியில் உள்ள பிரச்னைகளை பற்றி பேசக்கூடாது என்றால், நான் இங்கு இருக்க வேண்டிய அவசியமே இல்லை' என்றார். எம்.எல்.ஏ.,வுக்கும், அமைச்சருக்கும் இடையில் கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. கோபம் அடைந்த சதீஷ் சைல், கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். ஒரே கட்சியில் இருந்தாலும் அமைச்சர், எம்.எல்.ஏ., இடையிலான மோதல் உத்தர கன்னடா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை