காங்கிரஸ் எம்.எல்.சி.,யை தாக்க முயன்றதால் பரபரப்பு
ராய்ச்சூர் : காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள், எம்.எல்.சி., சரணகவுடாவை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசகூரில் காங்கிரசில் கோஷ்டி மோதல் உச்சத்தை எட்டி உள்ளது. காங்., - எம்.எல்.சி., சரணகவுடா பையாப்பூருக்கும், முன்னாள் காங்., - எம்.எல்.ஏ., டி.எஸ். ஹூலிகேரிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ., ஹூலிகேரியின் ஆதரவாளரான, லிங்கசகூரின் காங்கிரஸ் தலைவர் கோவிந்தா நாயக்கை, யாரென தெரியாது என சில தினங்களுக்கு முன், எம்.எல்.சி., சரணகவுடா கூறினார். இதை கேட்ட ஹூலிகேரி ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து, நேற்று லிங்கசகூரில் உள்ள கோரேபாலா கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள, எம்.எல்.சி., சரணகவுடா தனது ஆதரவாளர்களுடன் காரில் வந்து கொண்டிருந்தார். இதை அறிந்த ஹூலிகேரி ஆதரவாளர்கள், எம்.எல்.சி., காரை வழிமறித்து, அவரை தாக்க முயன்றனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், எம். எல்.சி., தரப்பில் ஒருவரை அடித்தனர். பிரச்னை பெரிதாவதற்கு முன்னதாக, சண்டை தடுக்கப்பட்டு, எம்.எல்.சி.,யின் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.