காங்., சமூக ஊடக பிரிவு தலைவர் பதவி: தாக்கு பிடிப்பாரா ஐஸ்வர்யா?
ஒரு கட்சிக்கு 'சமூக ஊடகப்பிரிவு' அணி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், அந்த கட்சி செய்யும் நலப்பணிகளை மக்களிடம் கொண்டு செல்வது; ஆளுங்கட்சியாக இருந்தால், அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்துவது; எதிர்க்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டுவது உள்ளிட்டவை முக்கிய பணிகளாகும்.எதிர்க்கட்சியாக இருந்தால், ஆளுங்கட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்துவது; அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது என சொல்லிக் கொண்டே போகலாம். இன்றைய காலகட்டத்தில் ஒருகட்சியின் கொள்கை பரப்பு செயலராக செயல்படுவது, சமூக ஊடகப்பிரிவுதான். இப்படிப்பட்ட சமூக ஊடகப்பிரிவை கர்நாடக காங்கிரஸ், கடந்த காலத்தில் சிறப்பாக கட்டி ஆண்டது. குறிப்பாக, 2023 சட்டசபை தேர்தலில் அப்போதைய ஆளுங்கட்சியான பா.ஜ., அரசு, அரசு டெண்டர்களில் 40 சதவீதம் ஊழல் செய்ததாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டது. இது மக்களிடையே எளிதில் சென்றடைந்தது. கண் திருஷ்டி
அது போல, காங்., தேர்தல் வாக்குறுதியான ஐந்து வாக்குறுதித் திட்டங்கள் குறித்தும் பிரபலப்படுத்தியது. இவை இரண்டும் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற துருப்புச் சீட்டாக அமைந்தன.இப்படி பலம் வாய்ந்த காங்கிரசின் சமூக ஊடகப்பிரிவு அணி மீது, எந்த எதிர்க்கட்சித் தலைவரின் கண்பட்டதோ, சமீப காலமாகவே சர்ச்சையில் சிக்குவதே வழக்கமாக உள்ளது. 'எக்ஸ்' வலைதளத்தில் இந்தியா வரைபடத்தை பதிவிடும்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீரை நீக்கிவிட்டு பதிவிடுவது, கர்நாடகா காங்கிரசின் வாடிக்கை. இதற்கு எதிர்ப்புகள் வந்ததும், அந்த பதிவை நீக்குவதும் தொடர் கதையாக இருந்தது. சர்ச்சை
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் நம் ராணுவம் 'ஆப்பரேஷன் சிந்துாரை' நடத்தியது. இதற்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ், 'எக்ஸ்' பக்கத்தில் 'அமைதியே சிறந்த ஆயுதம்' என காந்தியின் பொன்மொழியை பதிவிட்டது.இது ஆப்பரேஷன் சிந்துாரை அவமதிப்பதாக கருத்துகள் மேலோங்கின. எதிர்க்கட்சித் தலைவர்களை தாண்டி, மக்களே கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.இந்த விஷயம் கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் வரை சென்றது. விஷயம் கைமீறிப் போவதை புரிந்து கொண்ட சிவகுமார், இந்த விஷயத்தில் ஈடுபட்ட சமூக ஊடகப்பிரிவு அணியை சார்ந்தவர்களை பணியிலிருந்து நீக்கவிட்டதாக, பொது வெளியில் தெரிவித்தார்.இப்படி பல பிரச்னைகள் உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்களின் படங்களை பதிவிடும்போது மூத்த தலைவர்களின் வரிசையில் தவறு நடந்தால், சொந்த கட்சியினரே சம்பந்தப்பட்டவர்களை அழைத்து சத்தம் போடுவதும் உண்டு. புதிய தலைவர்
இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த சமூக ஊடகப்பிரிவு அணியின் தலைவராக இருந்தவர் நடராஜ் கவுடா. இவரின் பதவிக்காலம் முடிவதற்குள், புதிய தலைவராக ஐஸ்வர்யா மகாதேவ், கடந்த மாதம் 29ம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார். இவரிடம், தலைவர் பதவிக்கான தகுதிகள் உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஐஸ்வர்யா, ஒரு வக்கீல். அதுமட்டுமின்றி, காங்கிரசின் தேசிய செய்தி தொடர்பாளர், கர்நாடக காங்கிரஸ் ஊடகம் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர். 'டிவி' விவாதங்களில் சாமர்த்தியமாக பேசக்கூடியவர்.இப்படி பன்முக திறமைகள் கொண்டவராக இருந்தாலும், சமூக ஊடப்பிரிவு தலைவர் பதவி எனும் 'முள்கிரீடத்தை' சுமக்க முடியுமா? பிரச்னைகளை சமாளிப்பாரா? சர்ச்சைகளில் சிக்காமல் இருப்பாரா? தலைவர் பதவியில் தாக்கு பிடிப்பாரா என்ற கேள்விகளுக்கு, அவரது செயல்பாடுகள், விரைவிலேயே பதில் அளிக்கும் என நம்பலாம். - நமது நிருபர் -