ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.2,400 கோடி பாக்கி; பெங்களூரில் சாலை பள்ளங்களை மூடுவதில் தயக்கம்
பெங்களூரு : நிலுவைத் தொகையை அரசு வழங்காததால், பெங்களூரில் சாலை பள்ளங்களை மூட ஒப்பந்ததாரர்கள் தயங்குவதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெங்களூரில், சாலைப் பள்ளங்களால் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இவை விபத்துகளுக்கும் காரணமாகின்றன. பள்ளங்களை மூடும்படி, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உத்தரவிட்டார். சில இடங்களில், பணிகள் நடந்து வருகின்றன. பல இடங்களில் பணிகளை துவக்க வேண்டியுள்ளது. இங்கெல்லாம் பணிகளை மேற்கொள்ள ஜி.பி.ஏ.,வுக்கு ஒப்பந்ததாரர்கள் கிடைக்கவில்லை. இதற்கு முன்பு பெங்களூரு மாநகராட்சியாக இருந்தபோது, பணிகளை செய்த ஒப்பந்ததாரர்களுக்கு, 2,400 கோடி ரூபாய் பில் பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இதே காரணத்தால், பள்ளங்களை மூடும் பொறுப்பை ஏற்க, ஒப்பந்ததாரர்கள் தயங்குகின்றனர். இதுகுறித்து, ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் மஞ்சுநாத் கூறியதாவது: பெங்களூரில் சாலைப் பணிகளை செய்த பின், நிர்ணயித்த நாட்களுக்குள் சேதமடைந்தால், அதை சரி செய்வது ஒப்பந்ததாரரின் பொறுப்பு. அந்த காலம் முடிந்த பின், சாலை பாழானால் அதை சரி செய்யும் பணிக்கு, மாநகராட்சி பணம் கொடுக்க வேண்டும். இப்போது ஜி.பி.ஏ.,வாக மாறியுள்ளது. ஐந்து மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பணிகளை நடத்தினால் பணம் கொடுப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது பணிகளை நடத்தினால், பணம் கிடைக்குமா? கடந்த 2013 முதல், இதுவரை 2,400 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. பல போராட்டங்கள் நடத்தி, எச்சரித்த பின் 500 கோடி ரூபாய் வழங்கியது. செய்த பணிக்கு பணம் கொடுக்காமல், இப்போது சாலைப் பள்ளங்களை மூடும்படி அரசு கூறுகிறது. பணிகளை முடித்த பின், ஜி.பி.ஏ., கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சிகள், பணிகளை முடித்த பின் எங்களை கைவிட்டு விடும். இதை மனதில் கொண்டே, சாலைப் பள்ளங்களை மூடும் பணியை ஏற்க, ஒப்பந்ததாரர்கள் தயங்குகின்றனர்; அஞ்சுகின்றனர். சாலைப் பள்ளங்களை முடும்படி, எங்களுக்கு அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். பில் தொகை வழங்குவதில், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். இதற்கு முன்பு பணி முடித்த பின், நேர்மையாக பணத்தை கொடுத்திருந்தால், இப்போது சாலைப் பள்ளங்களை மூட, ஒப்பந்ததாரர்கள் தாமாக முன் வந்திருப்பர். பெங்களூரில் சாலைப் பள்ளங்கள் ஏற்பட, ஊழலே முக்கிய காரணம். ஐந்து மாநகராட்சிகளுக்கு, தலா 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. அந்த பணத்தில், ஒப்பந்ததாரர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு பாக்கி செலுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.