சலவாதி நாராயணசாமி குறித்து காங்., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
மங்களூரு: மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமியை, நாயுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ., அசோக் ராய் பேசியது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. தட்சிணகன்னடாவின், உப்பினங்கடியில், விபி ஜி ராம் ஜி சட்டம் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, நேற்று முன் தினம் நடந்தது. இதில் பேசிய மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, 'மத்திய அரசு வழங்கும் நிதியுதவி விஷயத்தில், காங்கிரசார் பொய் சொல்கின்றனர். இதை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன். நிதியுதவி குறித்து, புத்துார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., அசோக் ராய், எங்களோடு விவாதிக்க வரட்டும்' என சவால் விடுத்திருந்தார். இவருக்கு பதிலடி கொடுத்து, புத்துார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., அசோக் ராய், நேற்று கூறியதாவது: நாய்க்கு யார் நல்லவர், யார் கெட்டவர் என்பது தெரியாது. அது யார் வந்தாலும் குரைக்கும். சலவாதி நாராயணாவும் நாயை போன்றவர். அவருக்கு எதுவும் தெரியாது. அது பாவம் குரைக்கிறது. அதன் மீது நாங்கள் கல்லெறிய மாட்டோம். இது பிராணிதானே. இவருக்கு அறிவு இல்லை. சலவாதி நாராயணசாமியை, பா.ஜ.,வினர் எதற்காக எங்கள் தொகுதிக்கு அழைத்து வருகின்றனர் என்பது தெரியவில்லை. அவ்வப்போது வந்து குரைத்துவிட்டு செல்கிறார். யாருக்கு எத்தனை ஆண்டு, அதிகாரம் இருக்கும், யார் எம்.எல்.சி., - எம்.எல்.ஏ., ஆவர் என்பது தெரியவில்லை. பதவி நிரந்தரமானது அல்ல. நிதியுதவி விஷயத்தில், பா.ஜ.,வினரின் எந்த சவால்களுக்கும், நான் தயார். சலவாதி நாராயணசாமி அழைத்த இடத்துக்கு நான் செல்லமாட்டேன். நான் எம்.எல்.ஏ., நான் அழைக்கும் இடத்துக்கு, அவர் வரட்டும். அவரது கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். நாங்கள் எந்த வம்புக்கும் செல்ல மாட்டோம். ஆனால் எங்களை சீண்டினால், தக்க பதிலடி தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.