40 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் தம்பதி, 2 மகன்கள் தப்பினர்
ஹாசன்: மலைப்பாதை சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் 40 அடி பள்ளத்தில் பாய்ந்தது. காரில் பயணம் செய்த தம்பதி - இரண்டு மகன்கள் உயிர் தப்பினர். தாவணகெரே சென்னகிரியை சேர்ந்தவர் கோவிந்த். இவரது மனைவி ஆஷா. இந்த தம்பதியின் மகன்கள் ஹர்ஷித், வர்ஷித். நேற்று காலை சென்னகிரியில் இருந்து மங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கோவிந்த் ஓட்டினார். ஹாசன் சக்லேஷ்பூர் ஷிராடி காட் மலைப்பாதை சாலையில் சென்றபோது, கோவிந்த் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி, 40 அடி பள்ளத்தில் பாய்ந்து, நீரோடையில் சென்று நின்றது. இதை கவனித்த வாகன ஓட்டிகள், சக்லேஷ்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு படையினர் காருக்குள் இருந்த தம்பதி, இரண்டு மகன்களை உள்ளூர் மக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். கடந்த சில தினங்களாக சக்லேஷ்பூர் பகுதியில் பெய்து வரும் மழையால் ஷிராடி காட் சாலையில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கார் நின்ற இடத்திற்கு பக்கத்தில் ஆழமான இடம் உள்ளது. அதிர்ஷ்டவசமாக நான்கு பேரும் உயிர் தப்பினர்.