உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்த கூறிய தகராறில் தம்பதி மீது தாக்குதல்

 ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்த கூறிய தகராறில் தம்பதி மீது தாக்குதல்

பேடரஹள்ளி: ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்தும்படி கூறியதால் ஏற்பட்ட தகராறில், தம்பதியை கிரிக்கெட் மட்டை மற்றும் ஸ்டிக்கால் தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. பெங்களூரு பேடரஹள்ளி சிண்டிகேட் லே - அவுட்டில் இரண்டு மாடி கட்டடம் கொண்ட வீட்டில், முதல் தளத்தில் வசிப்பவர் சந்தோஷ். இவரது மனைவி சுபா. தனியார் நிறுவன ஊழியரான சந்தோஷ், கட்டடத்தின் தரைதளத்தில் தன் காரை நிறுத்துவது வழக்கம். நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் காரில் வீட்டிற்கு வந்தார். வழக்கமாக அவர் காரை நிறுத்தும் இடத்தில், தரைதளத்தில் உள்ள வீட்டில் வசிக்கும் ரத்னம்மா என்பவரின் மகன் தன் ஸ்கூட்டரை நிறுத்தி இருந்தார். ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்துங்கள்; என் காரை விட வேண்டும் என்று ரத்னம்மாவிடம், சந்தோஷ் கூறினார். இதற்கு மறுத்த ரத்னம்மா, சந்தோஷை ஆபாசமாக திட்டி உள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ரத்னம்மா, அவரது மகன், மருமகன், மகள் ஆகியோர், சந்தோஷை கிரிக்கெட் மட்டை, ஸ்டிக்கால் தாக்கினர். கணவரை காப்பாற்ற வந்த சுபாவையும் தாக்கியதுடன், காரையும் கிரிக்கெட் மட்டையால் அடித்து சேதப்படுத்தினர். தகவல் அறிந்த பேடரஹள்ளி போலீசார் அங்கு வந்தனர். அதற்குள் ரத்னம்மா உட்பட நான்கு பேரும் தப்பி சென்றனர். சந்தோஷ், சுபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தம்பதி அளித்த புகாரில், நான்கு பேர் மீது வழக்கு பதிவானது. தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ