பண்டிப்பூர் வனப்பகுதியில் போட்டோ எடுத்த ஜோடிக்கு ரூ.24,000 அபராதம்
சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவில் உள்ள பண்டிப்பூர் தேசிய பூங்கா, சுற்றுலா பயணியருக்கு விருப்பமான இடமாகும்.தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். பண்டிப்பூர் வனப்பகுதி சாலையில் பயணிக்கும் மக்களுக்கு, வனத்துறை சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.வனப்பகுதி சாலையில் செல்லும்போது, நடுவில் வாகனங்களை நிறுத்தி இறங்கக் கூடாது. வன விலங்குகளை பார்த்து அவற்றின் அருகில் சென்று, போட்டோ, வீடியோ எடுக்கக் கூடாது என, அறிவுறுத்தியுள்ளது. அப்படி செய்வது சட்டப்படி குற்றமாகும். இதை மீறினால் வழக்குப் பதிவு செய்து அபராதமும் விதிக்கப்படுகிறது.ஆனால் பலரும் இந்த உத்தரவை பின்பற்றுவது இல்லை. பலரும், வனப்பகுதி சாலையில் பயணம் செய்யும்போது, வழியில் வாகனங்களை நிறுத்தி போட்டோ, வீடியோ எடுக்கின்றனர். இவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர்.நேற்று முன்தினம், விதிமீறலாக பண்டிப்பூர் வனப்பகுதிக்குள் நுழைந்த ஜோடி ஒன்று, மங்கலா என்ற இடத்தில் காரை நிறுத்தி போட்டோ எடுத்தனர். இதை பார்த்த அப்பகுதியினர், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.வனத்துறையினர் அங்கு வந்து விசாரித்தபோது, காரில் இருந்த ஜோடி பெங்களூரை சேர்ந்த பல்லவி - கோஷ் என்பது தெரிந்தது. இவர்கள் நான்கைந்து போட்டோக்கள் எடுத்திருந்தனர். இவர்களிடம் 24,000 ரூபாய் அபராதம் வசூலித்த அதிகாரிகள், எச்சரித்து அனுப்பினர்.