மோதிரம் காணாமல் போன தகராறில் தம்பதி தற்கொலை
பாகல்கோட்: தங்கமோதிரம் காணாமல் போனதால், தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். பாகல்கோட் மாவட்டம், முதோல் தாலுகாவின், குளலி கிராமத்தில் வசித்தவர் அப்பாஷி, 35. இவரது மனைவி ராஜேஸ்வரி, 30. தம்பதிக்கு நான்கு மற்றும் ஒரு வயதில், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பம், கூட்டு குடும்பமாகும். கடந்த ஆறு மாதங்களுக்கு முன், ராஜேஸ்வரியின் 5 கிராம் தங்க மோதிரம் காணாமல் போனது. இது தொடர்பாக அவ்வப்போது வீட்டில் சண்டை நடந்தது. தன் மோதிரத்தை குடும்பத்தினரே எடுத்திருக்கலாம் என ராஜேஸ்வரி சந்தேகித்தார். இவரது மாமியாரும் மைத்துனரும், ‘மோதிரம் காணாமல் போனதை பற்றி வருத்தப்பட வேண்டாம். புதிய மோதிரம் வாங்கி தருகிறோம். இந்த விஷயத்தை இத்துடன் விட்டு விடு’ என, சமாதானம் செய்துள்ளனர். ஆனால், ராஜேஸ்வரி சண்டை போடுவதை நிறுத்தவில்லை. இதனால் மனம் வருந்திய அப்பாஷி, நேற்று முன் தினம் அதிகாலை மாட்டு கொட்டகையில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்த ராஜேஸ்வரி, கணவரை தேடிய போது, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி, தன் அறைக்கு சென்று குழந்தைக்காக கட்டியிருந்த தொட்டில் கயிற்றில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதோல் போலீசார் விசாரிக்கின்றனர்.