உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சின்னசாமி மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட்? பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய சிறப்பு பணிக்குழு

 சின்னசாமி மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட்? பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய சிறப்பு பணிக்குழு

பெங்களூரு: சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது பாதுகாப்பானதா என்பது குறித்து சோதனை செய்வதற்கு சிறப்பு பணிக்குழுவை மாநில அரசு அமைத்து உள்ளது. இக்குழுவினர் அளிக்கும் அறிக்கையை பொறுத்தே போட்டிகள் நடக்குமா, நடக்காதா என்பது தெரிய வரும். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஜூனில் ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐ.பி.எல்., கோப்பை வெற்றி கொண்டாட்டம் நடந்தது. இதில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் சின்னசாமி மைதானத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. இதனால், இங்கு நடக்க வேண்டியிருந்த உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் போட்டிகள் நடக்கவில்லை. தொடர் முயற்சி இந்நிலையில், சின்னசாமி மைதானத்தில் மீண்டும் ஐ.பி.எல்., மற்றும் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் போட்டிகள் நடத்த வேண்டுமென கர்நாடக கிரிக்கெட் அசோசியேஷன் புதிய தலைவராக பொறுப்பேற்ற வெங்கடேஷ் பிரசாத் முயற்சிகள் எடுத்து வருகிறார். இது தொடர்பாக, நேற்று பெங்களூரு விதான் சவுதாவில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கர்நாடக கிரிக்கெட் அசோசியேஷன் நிர்வாகிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பலர் பங்கேற்றனர். சின்னசாமி மைதானத்தில் விஜய் ஹசாரே போட்டி, ஐ.பி.எல், உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என அரசிடம் அசோசியேஷன் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதற்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அளித்த பதில்: இங்கு போட்டிகள் நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங், கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ், பொதுப்பணி துறை, தீயணைப்பு, சுகாதாரத்துறை, பெஸ்காம் ஆகிய அதிகாரிகள் இடம்பெறுவர். இந்த குழுவினர் மைதானத்தின் அவசர கால வழிகள், மின்சார வசதி, மருத்துவ வசதி, கூட்டக் கட்டுப்பாடு, உள்கட்டமைப்பு போன்றவற்றை நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பர். அறிக்கையை பார்த்த பின், மாநில உள்துறை அமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும். இந்த முடிவின் மூலமே ஐ.பி.எல்., மற்றும் உலக த்தரம் வாய்ந்த கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு கூறினார்.

சுதர்சனேஹாமம்

சின்னசாமி மைதானத்தின் மீதான அவப்பெயர் நீங்க வேண்டும் என்பதற்காக, நேற்று மைதானத்தில் கணபதி பூஜை, சுதர்சன ஹோமம், நவக்கிரக பூஜை ஆகியவை புரோகிதர்களால் நடத்தப்பட்டன. விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டிகள், நாளை தொடங்குகின்றன. ஒரு வேளை சின்னசாமி மைதானத்தில் போட்டி நடந்தால் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிப்பது சந்தேகமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ