மோசடியில் 3 பேர் கைது 'எல் இன்வெஸ்ட்மென்ட் ஸ்ட்ராடஜீஸ் டிஸ்கஷன்' என்ற வாட்ஸாப் குழுவில் பலரை சேர்த்து, இணையவழியில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி, பணத்தை பெற்று மோசடி செய்த, ஜார்க்கண்ட் மாநிலத்தின் அமித் மிஸ்ரா, பெங்களூரு ஜே.சி.நகரின் தவுசீப் அகமது, ஜீவன்பீமாநகரின் பரசுராம் ஆகியோரை, பெங்களூரு வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர். விவசாயி தற்கொலை கொப்பால் குகனுாரின் லகமாபுரா கிராமத்தில் வசித்தவர் ஈரப்பா, 39. விவசாயியான இவர், திருமணத்துக்காக பெண் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. இது பற்றி தன் உறவினர்களிடம் கூறி வருந்திய ஈரப்பா, நேற்று மதியம் விஷம் குடித்து, தற்கொலை செய்து கொண்டார். தந்தையை கொன்ற மகன் கைது சிக்கமகளூரின் வட்டரதிப்பா கிராமத்தில் வசித்தவர் தம்மையா, 59. இவரது மகன் கணேஷ், 29. தம்மையாவின் மனைவி இறந்த பின், வேறு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தந்தை, மகன் இருவருமே குடிகாரர்களாக இருந்ததால், மனைவி வீட்டை விட்டு சென்றுவிட்டார். நேற்று முன் தினம் மனைவியை வீட்டுக்கு வரும்படி, தம்மையா அழைத்தார். தந்தையும், சித்தியும் ஒன்று சேர்ந்தால், தன்னை வீட்டை விட்டு விரட்டுவார்கள் என்ற பயத்தில், கணேஷ் நேற்று காலை தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இவரை போலீசார் கைது செய்தனர். சிலிண்டர் வெடித்து இருவர் பலி ஹூப்பள்ளியின் அயோத்தியா நகரில் நேற்று அதிகாலை வீடு ஒன்றில் காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, வெடித்து சிதறியது. பலத்த காயமடைந்த மோகன் கலால், 40, பிரவீன் கலால், 45, உயிரிழந்தனர். சுமனா கலால் என்ற பெண் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். சிறுமியரிடம் சில்மிஷம் ஹூப்பள்ளி நகரில் வசிக்கும் மஜீத் நதாப், 29, இவர் அப்பகுதி சிறுவர், சிறுமியருக்கு பணம் கொடுத்து, குட்கா வாங்கி வர செய்வார். அவர்களுக்கு மொபைல் போனில் ஆபாச படம் காட்டுவார். இரண்டு நாட்களுக்கு முன், சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை சிறுமி பெற்றோரிடம் கூறினார். கோபமடைந்த மக்கள், நேற்று முன் தினம் மஜீத் நதாபை அடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.