‘கடனை வசூலிக்க கிரிமினல் வழக்கை அஸ்திரமாக பயன்படுத்த முடியாது’
பெங்களூரு: ‘பாக்கியுள்ள கடனை வசூலிக்க, வங்கி நிறுவனங்கள் கிரிமினல் வழக்குகளை, அஸ்திரமாக பயன்படுத்த முடியாது,’ என கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. பெங்களூரை சேர்ந்த பிரீதேஷ் பாரி என்பவர், பிளாட் வாங்கும் நோக்கில், தேசிய வங்கி ஒன்றில், 39.92 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இதற்காக வங்கி மற்றும் பில்டருடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால், பில்டர் கட்டுமான பணிகளை முடிக்கவில்லை. இதனால், பிரீதேஷ் பாரியின் பெயருக்கு பிளாட்டை கிரயம் செய்து கொடுக்கவில்லை. இதற்கிடையே, வங்கியின் அனுமதி இல்லாமல், அதே பிளாட்டை மூன்றாம் நபருக்கு பில்டர் விற்று விட்டார். வங்கியில் கடன் பாக்கி இருந்ததால், பிரீதேஷ் பாரி மீது, பெங்களூரின் சங்கரபுரா போலீஸ் நிலையத்தில், கிரிமினல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு, உயர் நீதிமன்ற நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் முன்னிலையில் நேற்று விசாரணை நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ‘குற்றம் நடந்துள்ளது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. பலவந்தமாக கடனை வசூலிக்க, இத்தகைய வழக்கு பதிவு செய்திருப்பது தெரிகிறது. இது, சட்டவிரோதம். ஒப்பந்தப்படி கட்டுமான திட்டம் ரத்தானால் அல்லது பில்டர் குளறுபடி செய்தால், வங்கிக்கு பணத்தை திருப்பி தரும் பொறுப்பு பில்டருடையது. ‘மனுதாரருக்கு பிளாட் தராமல், பில்டர் மோசடி செய்துள்ள நிலையில், கடன் பாக்கி உள்ளது என்ற, ஒரே காரணத்துக்காக கடன் வாங்கியவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்திருப்பது சரியல்ல. கடனை வசூலிக்க கிரிமினல் சட்டத்தை, அஸ்திரமாக பயன்படுத்திய வங்கியின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது’ என்றார். மேலும், வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.