தட்சிண கன்னடா காங்., தலைவர் தேர்வு பணிகள் இன்று துவக்கம்
தட்சிண கன்னடா: தட்சிண கன்னடாவின் புதிய மாவட்ட காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யும் பணி இன்று துவங்குகிறது. தட்சிண கன்னடா மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஹரிஷ்குமாரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால், புதிய மாவட்ட தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் நேற்று துவங்கின. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியினர் இணைந்து புதிய தலைவரை தேர்ந்தெடுப்பர். இப்பணிகள் கேரளத்தின் கோழிக்கோடு வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஜெயந்த் தலைமையில் நடக்கிறது. ஜெயந்த் தலைமையிலான குழுவினர், மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகள், 16 காங்கிரஸ் அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவர். தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களிடம் கலந்தாய்வு மேற்கொள்வர். இப்பணிகள் இன்று முதல், வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்கின்றன. இதில், தகுதியான 3 - 7 நபர்கள் அடங்கிய இறுதி பட்டியலை கட்சி மேலிடத்திடம் வழங்குவர். கட்சி மேலிடம் முடிவு செய்யும் நபர், புதிய மாவட்ட தலைவராக நியமிக்கப்படுவார். இதுகுறித்து, ஜெயந்த் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளையும் அடுத்த சட்டசபை தேர்தலில் கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணிகளை துவங்குவதற்கு தலைவர் அவசியம். அந்த தலைவர் தகுதியானவராகவும், திறமையானவராகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே கள ஆய்வு நடத்தப்படுகிறது. அனைத்து தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.