உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காங்.,கில் தலித் முதல்வர்

காங்.,கில் தலித் முதல்வர்

கூச்சல் குழப்பத்துக்கு பெயர் பெற்ற கர்நாடக காங்கிரசில், எப்போது, எதுவும் நடக்கலாம் என்ற நிலை உள்ளது. முதல்வர், துணை முதல்வர் பதவிகளுக்கான ரேஸும் சூடுபிடித்துள்ளது.சித்தராமையா, இரண்டரை ஆண்டு ஒப்பந்த முறையில் முதல்வராக இருந்து வருகிறார். ஒப்பந்த காலம் முடிவடையும்போது, அடுத்த முதல்வராக பதவியேற்கலாம் என சிவகுமார் ஆசையுடன் இருக்கிறார். ஆனால், முதல்வர் நாற்காலியை சிவகுமாருக்கு விட்டுத்தரும் எண்ணத்தில் சித்தராமையா இல்லை. எக்காரணம் கொண்டும் சிவகுமாருக்கு முதல்வர் பதவி கிடைக்கக் கூடாது என்பதே அவரது சமீபத்திய நடவடிக்கைகளாக உள்ளன.முதல்வர் பதவியை தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு கொடுப்பதன் வாயிலாக, சிவகுமாருக்கு 'செக்' வைக்க அவர் திட்டம் போடுகிறார். அவ்வகையில், வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை, முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரசில் வெடிக்கும். முதல்வராக பரமேஸ்வரோ, சதீஷ் ஜார்கிஹோளியோ ஆகலாம். சிவகுமார் அடுத்த முதல்வர் கிடையாது என, பா.ஜ., கணித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை தலித் முதல்வர் என்ற பேச்சு எழும்போதெல்லாம் சதீஷ், பரமேஸ்வர் ஆகிய இருவரின் பெயர்களும் அடிபடுவது வழக்கமே. ஆனால், தன் உள்துறை இலாகாவையே சமாளிக்க முடியாமல் பரமேஸ்வர் திணறி வருகிறார். அதனால், அவர் முதல்வர் பதவியை எப்படி சமாளிப்பார் என்பதும் கேள்விக்குறியே.ஆனால்,முதல்வர் பதவியை பரமேஸ்வருக்கு விட்டுக் கொடுக்கவே சித்தராமையா விரும்புவதாக தெரிகிறது. இருவருக்கும் இடையே இருக்கும் நெருக்கமும், அவர் மீது இருக்கும் நம்பிக்கையும் இதற்கு காரணமாக இருக்கலாம்.மறுபுறம் அடுத்த முதல்வராவதற்கான முயற்சிகளில் சதீஷ் ஜார்கிஹோளி சாதுர்யமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் சதீஷ் கூறுகையில், 'முதல்வர் பதவிக்கு என் பெயர் குறிப்பிடவில்லை. இருப்பினும், 2028ல் தலித் முதல்வர் குறித்து தீவிர ஆலோசனைகள் நடக்கும' என, சூசகமாக தெரிவித்தார்.இவை அனைத்தையும் தலித் சமூகத்தை சேர்ந்த அமைச்சரும், சமூக நலத்துறை அமைச்சருமானமஹாதேவப்பா உன்னிப்பாக கவனித்து வருகிறார். அடிக்கடி, 'நானும் இங்கே தான் இருக்கேன்' என, அவரும் பதிவு செய்து வருகிறார்.எது எப்படியோ... 'சித்தராமையா, முதல்வர் பதவியில் இருந்து கீழே இறங்கினாலும், அது சிவகுமாருக்கு கிடைக்காது; தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரே அடுத்த முதல்வர்' என பா.ஜ.,வினர் கூறி வருகின்றனர். இதற்கான விடை, இன்னும் சில மாதங்களில் கிடைத்து விடும் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை