தந்தை வீட்டில் ரூ.21 லட்சம் நகைகள் திருடிய மகள் கைது
மாரத் ஹள்ளி: பெங்களூரு, மாரத்தஹள்ளியின், யமனுாரில் வசிப்பவர் ராஜு, 62. இவரது மகள் ஷோபா, 36, திருமணமாகி, கக்கதாசபுராவில் வசிக்கிறார். இவர் புதிதாக வீடு கட்டியுள்ளார். இதற்காக பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கினார். இதை அடைக்க முடியாமல் திணறினார்.கடனை அடைக்க பணம் தரும்படி, தந்தை ராஜுவிடம் கேட்டார். அவர் மறுத்துவிட்டார். இதனால் தந்தை மீது ஷோபா எரிச்சல் அடைந்தார். மார்ச் 20ம் தேதியன்று, ராஜுவின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிக் கொண்டு, காசி யாத்திரை சென்றிருந்தனர். இதை சாதகமாக பயன்படுத்திய ஷோபா, கள்ளச்சாவி போட்டு தந்தையின் வீட்டைத் திறந்தார்.பீரோவில் இருந்து, 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடினார். அதில் 30 கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்தார். மீத நகையை தன் வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்தார்.சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பின், காசியில் இருந்து திரும்பிய ராஜு குடும்பத்தினர், வீட்டில் திருட்டு நடந்திருப்பதை அறிந்து, உடனடியாக மாரத்தஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கினர். விசாரணையில் கிடைத்த தடயங்கள், ராஜுவின் மகள் ஷோபா மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தபோது, திருடியதை ஒப்புக்கொண்டார்.அவரிடம் இருந்து தங்க நகைகள் மீட்கப்பட்டன. நேற்று முன் தினம் ஷோபா கைது செய்யப்பட்டார்.