உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரின் 5 மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்த முடிவு!: காங்., சார்பில் போட்டியிட விண்ணப்பம் வினியோகம்

பெங்களூரின் 5 மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்த முடிவு!: காங்., சார்பில் போட்டியிட விண்ணப்பம் வினியோகம்

ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ் வரும் ஐந்து மாநகராட்சிகளுக்கும், தேர்தல் நடத்த அரசு முடிவு செய்து உள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, விண்ணப்பம் வினியோகம் நேற்று துவங்கியது. பெங்களூரு மக்களுக்கு, கர்நாடக அரசின் அனைத்து சேவைகளும், ஒரே குடையின் கீழ் கிடைக்கும் நோக்கில், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தை காங்கிரஸ் அரசு அமைத்தது. இதன்மூலம், 163 ஆண்டு பாரம்பரியம் கொண்ட, பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் முடிவுக்கு வந்தது. தற்போது ஜி.பி.ஏ.,வின் கீழ் மேற்கு, வடக்கு, தெற்கு, சென்ட்ரல், கிழக்கு என்று ஐந்து மாநகராட்சிகள் உள்ளன. இந்த மாநகராட்சிகளின் கீழ் 369 வார்டுகள் உள்ளன. அதிகபட்சமாக மேற்கில் 112 வார்டுகள் உள்ளன. வடக்கு, தெற்கில் தலா 72 வார்டுகள்; சென்ட்ரலில் 63; கிழக்கில் 50 வார்டுகள் உள்ளன. * அதே நிலை பெங்களூரு மாநகராட்சியாக இருந்த போதே, 2020ல் இருந்தே தேர்தல் நடக்கவில்லை. இன்னும் அதே நிலை நீடிக்கிறது. தொகுதி மறுவரையறை, இடஒதுக்கீடு உட்பட பல காரணங்களை கூறி தேர்தலை நடத்தாமல் தள்ளி போடுகின்றனர். ஜி.பி.ஏ., அமைத்ததால் எந்த பலனும் இல்லை என்று, எதிர்க்கட்சி தலைவர்களும் தினமும் அரசை விமர்சிக்கின்றனர். ஆனால், துணை முதல்வரும், பெங்களூரு நகர வளர்ச்சித் துறை அமைச்சருமான சிவகுமார், ஜி.பி.ஏ.,ன் கீழ் உள்ள 5 மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்த நினைக்கிறார். இதற்காக பணிகளை மேற்கொள்ளும்படி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார். * 369 வார்டுகள் இந்நிலையில், டில்லியில் உள்ள கர்நாடக பவனில் சிவகுமார் நேற்று அளித்த பேட்டி: ஜி.பி.ஏ.,வின் கீழ் உள்ள 5 மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்த தயாராக உள்ளோம். காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஆசைப்படுவோருக்கு இன்று (நேற்று) முதல் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். இடஒதுக்கீடு இன்னும் இறுதியாகவில்லை என்றாலும், மாநகராட்சிகளின் 369 வார்டுகளில் போட்டியிட ஆர்வமாக உள்ளவர்களை கண்டறிய, விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. பொது பிரிவினர் 50,000 ரூபாயும்; பெண்கள் மற்றும் பட்டியல் ஜாதியினர், 25,000 ரூபாயும் செலுத்தி விண்ணப்பம் பெற்று கொள்ளலாம். இதன்மூலம் கிடைக்கும் பணம், கட்சி அலுவலகம் கட்ட பயன்படுத்தப்படும். ஆன்லைன் விண்ணப்பங்களுக்கும் அனுமதி வழங்கி உள்ளோம். ஐந்து மாநகராட்சிகளிலும் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை உள்ளது. இதற்கான பணிகளையும் ஏற்கனவே துவக்கி விட்டோம். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில், ஐந்து மாநகராட்சிகளுக்கும் அரசால் பரிந்துரை செய்யப்பட்டோரை கவுன்சிலர்களாக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு விளக்கம் அளித்துள்ள நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், 'ஜி.பி.ஏ.,க்கு உட்பட்ட 5 மாநகராட்சிகளுக்கும் நியமன கவுன்சிலர்களை நியமிக்கும் திட்டம் அரசிடம் இல்லை. இதுதொடர்பான குற்றச்சாட்டு ஆதாரமற்றது. 369 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தி, புதிய கவுன்சிலர்கள் தேர்ந்து எடுக்கப்படுவர்' என, தெரிவித்துள்ளது. ========= பாக்ஸ் ------- டில்லி போலீசார் சம்மன் சிவகுமார் அளித்த பேட்டி: ஜனநாயக அமைப்பை காப்பாற்ற, ஓட்டு திருட்டுக்கு எதிராக போராட்டம் துவங்கி உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் சட்ட குழு அமைப்போம். ஓட்டு திருட்டு விஷயத்தில் காங்கிரசை ஆதரிக்கும் வக்கீல்கள், இந்த குழுவில் சேர்க்கப்படுவர். ஓட்டு திருட்டுக்கு எதிராக டில்லியில் நடந்த போராட்டத்திற்கு கிடைத்த ஆதரவு, எங்களை ஊக்கம் அடைய செய்து உள்ளது. நான் டில்லி சென்றால், எங்கள் கட்சி மேலிட தலைவர்களை சந்திக்க கூடாது என்று எதுவும் உள்ளதா?. டில்லியில் உள்ள தலைவர்கள் என்னை பார்த்ததும் எனது பணி பற்றி விசாரிக்கின்றனர். எங்கள் சந்திப்பு நட்புரீதியானது. தனிப்பட்ட விஷயம் எதுவும் இல்லை. சில விஷயங்களை ஊடகங்கள் முன் பகிரங்கமாக பேச முடியாது. எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நீங்கள் தான் பிரச்னையை உருவாக்கி விடுகிறீர்கள். நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு ஆஜராக, டில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். விசாரணைக்கு ஆஜராக டில்லி வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை