மேலும் செய்திகள்
தனிஷ்க் ஜுவல்லரியில் எக்சேஞ்ச் திருவிழா
15-Jun-2025
மங்களூரு:விவசாய கூட்டுறவு வங்கியில், வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த 6.5 கிலோ தங்க நகைகளை திருடி, வேறு கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து, 3.25 கோடி ரூபாய் கடன் பெற்ற கூட்டுறவு வங்கி மேனேஜர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.தட்சிண கன்னடா மாவட்டம், மங்களுரு புறநகரான சக்தி நகரில் விவசாய கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு ப்ரிதேஷ், 40, மேனேஜராக பணியாற்றினார். இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் பலர், தங்களின் தங்க நகைகளை அடமானம் வைத்து, கடன் பெற்றுள்ளனர், நகைகள் லாக்கர்களில் வைக்கப்பட்டிருந்தன.மேனேஜர் ப்ரிதேஷ், லாக்கரில் இருந்த நகைகளை திருடினார். அவற்றை தனக்கு நெருக்கமான ஷேக் முகமது உதவியுடன், சக்தி நகரில் உள்ள, வேறு கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார். 6.5 கிலோ நகைகளை அடமானம் வைத்து. 3.25 கோடி ரூபாய் கடன் பெற்றுஉள்ளார்.தான் பணிபுரியும் கூட்டுறவு வங்கியில் அசல் நகைகளுக்கு பதிலாக, போலி நகைகளை மாற்றி வைக்க திட்டமிட்டார். இதற்காக 3.5 கிலோ போலி நகைகளும் தயாரித்திருந்தார். இந்த நகைகளை லாக்கரில் வைக்க நேரம் பார்த்திருந்தார்.இதற்கிடையில் சக்தி நகர் கிளையில் இருந்து, வேறு ஒரு கிளைக்கு ப்ரிதேஷ் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார். சக்தி நகர் கூட்டுறவு வங்கிக்கு வரும் புதிய மேனேஜரிடம், லாக்கரில் உள்ள நகைகள் உட்பட, அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டியிருந்தது.லாக்கரில் நகைகள் இல்லாததால் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில் பெங்களூர் வழியே வெளிநாட்டுக்கு தப்பினார். அங்கிருந்தபடியே கூட்டுறவு வங்கி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, தன் செயலை ஒப்புக்கொண்டு, நகைகளை திருப்பித் தர, ஓராண்டு அவகாசம் கேட்டார்.இதுதொடர்பாக, ஜூன் 17ம் தேதி, மங்களூரு போலீஸ் நிலையத்தில், வங்கி அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பின் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வந்து, தங்கள் நகைகளை ஒப்படைக்கும்படி வலியுறுத்தினர். போலீசாரும் ப்ரிதேஷை கண்டுபிடிக்க முயற்சித்தனர். அவருக்கு உதவிய ஷேக் முகமதுவை போலீசார் கைது செய்தனர்.போலீசாரிடம் இருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்த ப்ரிதேஷ், இரண்டு நாட்களுக்கு முன்பு, வெளிநாட்டில் இருந்து மங்களூருக்கு வந்தார். வக்கீல் மூலமாக நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தயாராகின்றனர்.ஷேக் முகமது கொடுத்த தகவலின்படி, அடமானம் வைக்கப்பட்டிருந்த 2.2 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டனர். இன்னும் 4.3 கிலோ தங்க நகைகளை மீட்கும் முயற்சியில் உள்ளனர். தனக்கு வேண்டப்பட்ட ஷேக் முகமதுவுக்கு, ப்ரிதேஷ் அன்பளிப்பாக அளித்திருந்த 50 கிராம் தங்க நகைகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
15-Jun-2025