அவதுாறு பதிவு வழக்கிற்கு தடை
பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, சமூக வலைதளத்தில் அவதுாறான கருத்தை பகிர்ந்ததாக கூறியவர் மீது தொடரப்பட்ட வழக்கிற்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மாண்டியா மாவட்டம், மலவள்ளியின் மெஹ்தி நகரை சேர்ந்த ஜாவித் பாஷா, இந்தாண்டு மே 8ம் தேதி, தன் முகநுாலில், 'பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடன், நம் நாட்டின் பிரதமர் மோடியை ஒப்பிட்டு, 'இந்தியாவை அழிக்க ஒரு இம்ரான் கான் போதும்' என பதிவிட்டிருந்தார். இதை கண்டித்து, மாண்டியா மாவட்டத்தின் கிருகாவலு போலீசில், மகேஷ் என்பவர் மே 9ம் தேதி புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆதாரங்களை திரட்டி, ஜாவித் பாஷாவை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாவித் பாஷா மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'மனுதாரரை கைது செய்தது சட்ட விரோதம். அவர் மீது தொடரப்பட்ட வழக்கிற்கு தடை விதிக்கப் படுகிறது' என்றார்.