மாணவர்களுக்கு முட்டை திட்டத்தில் தொய்வு
பெங்களூரு: கர்நாடகாவில் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில், பள்ளிகளில் மதிய உணவுடன் வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை வழங்கும் திட்டத்தை, மாநில அரசு செயல்படுத்தியது.முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்கப்படுகிறது. இதை வாரத்தில் ஆறு நாட்களாக நீட்டிக்க, அரசிடம் நிதி பற்றாக்குறை இருந்தது.எனவே கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், அஜீம் பிரேம்ஜி பவுன்டேஷன், 1,500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்களும் முட்டை வழங்க, இந்த நிதியுதவியை செய்தது. முட்டை வழங்கப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள, அஜீம் பிரேம்ஜி பவுன்டேஷன் ஊழியர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.மாநிலம் முழுதும் 762 பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தபோது, 568 பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே முட்டை வழங்கப்படுகிறது என்றும் மற்ற மூன்று நாட்களில் வாழைப்பழம் வழங்கப்படுகிறது என்றும் தெரிய வந்தது. முட்டை சாப்பிட விரும்பியபோதும் மாணவ, மாணவியருக்கு வாழைப்பழம் வழங்குவது, ஆய்வில் தெரிந்தது.இதுதொடர்பாக, கல்வித்துறைக்கு பிரேம்ஜி பவுன்டேஷன் அறிக்கை அளித்துள்ளது. இதில், 'பள்ளி மேம்பாட்டு கமிட்டியினர், வாரத்தில் ஆறு நாட்களுக்கு பதில், மூன்று நாட்கள் முட்டையும், மூன்று நாட்கள் வாழைப்பழமும் வழங்குகின்றனர்.திட்டத்தை செயல்படுத்துவதில் குளறுபடி நடந்துள்ளது. இதை மேற்பார்வையாளர் கவனித்து, சரி செய்யாததே திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கவனித்து சரி செய்ய வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளது.