உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சித்தராமையாவுக்கு போட்டியாக துணை முதல்வர் இரவு விருந்து

 சித்தராமையாவுக்கு போட்டியாக துணை முதல்வர் இரவு விருந்து

பெலகாவி: முதல்வர் சித்தராமையாவுக்கு போட்டியாக, துணை முதல்வர் சிவகுமார் இரவு விருந்து நடத்தியதால், அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கர்நாடகாவில் முதல்வர் பதவியை தக்க வைத்து கொள்ள சித்தராமையாவும், பதவியை பிடிக்க துணை முதல்வர் சிவகுமாரும், தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இருவரும் பேச்சு நடத்தி, ஒரு முடிவுக்கு வரும்படி கட்சி மேலிடம் உத்தரவிட்டது. இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தங்கள் வீட்டில் விருந்து வைத்தனர். ஆனாலும் முதல்வர் பதவி விஷயத்தில் இன்னும் தெளிவான முடிவு கிடைக்கவில்லை. அதற்குள் பெலகாவி கூட்டத்தொடர் துவங்கியதால், முதல்வர் பதவி பிரச்னைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. முதல்வர் மாற்றத்தை சிவகுமார் முன்மொழிந்த போது, கட்சி மேலிடம் ஏற்கவில்லை என்று, சித்தராமையாவின் மகன் யதீந்திரா கூறியதால் பிரச்னை மீண்டும் துவங்கியது. சிவகுமாருக்கு ஆதரவாக, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் பேச ஆரம்பித்தனர். இந்நிலையில் பெலகாவி வடக்கு எம்.எல்.ஏ., ஆசிப் ராஜு செய்ட் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்ட சித்தராமையா, தனது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிவகுமாரும் நேற்று முன்தினம் இரவு தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு விருந்து வைத்தார். விருந்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ., சோமசேகர் கூறுகையில், ''சிவகுமார் முதல்வராவது உறுதி. அவருக்கு எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது என்பதை எல்லாம் மேலிடம் கணக்கில் எடுத்து கொள்ளாது,'' என்றார். எம்.எல்.ஏ.,க்கள் இக்பால் உசேன், உதய் கூறுகையில், ''இந்த கூட்டத்தொடர் முடிந்ததும், சிவகுமார் முதல்வராகும் வாய்ப்பு உள்ளது,'' என்று கொளுத்தி போட்டார். இதுபற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் கோபமாக பதில் அளித்து விட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை