தர்மஸ்தலா பெண் பொறியாளர் பஞ்சாப் கல்லுாரியில் மர்மச்சாவு
கர்நாடகாவின் தர்மஸ்தலாவை சேர்ந்த இளம் பெண், பஞ்சாபில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.கர்நாடகா, தட்சிணகன்னடா மாவட்டம், பெல்தங்கடி தாலுகாவின், தர்மஸ்தலா அருகில் உள்ள போளியார் கிராமத்தில் வசிப்பவர் சுரேந்திரா. இவரது மனைவி சிந்துதேவி. இத்தம்பதியின் மகள் ஆகாங்ஷா, 22. இவர் பஞ்சாபின், எல்.பி.யு., பக்வாடா கல்லுாரியில் 'ஏரோஸ்பேஸ்' பொறியியல் படித்தார். சான்றிதழ்
அதன் பின், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், டில்லியில் ஏரோஸ்பேஸ் பொறியாளராக பணியில் சேர்ந்தார். இவருக்கு ஜெர்மனியில் மேற்படிப்பு படிக்க வேண்டும்; அதன்பின் ஜப்பானுக்கு சென்று பணியாற்ற வேண்டும் என்ற கனவு இருந்தது. இதற்காக முயற்சித்து வந்தார்; இதற்கு ஒரு சான்றிதழ் தேவைப்பட்டது.இதை வாங்கி வர, ஆகாங்ஷா இரண்டு நாட்களுக்கு முன், பஞ்சாப் சென்றிருந்தார். அங்கிருந்து தந்தையுடன் மொபைல் போனில் பேசினார். நேற்று முன்தினம் மாலையில், கல்லுாரி கட்டடத்தின், நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்ததாக அங்குள்ள போலீசார், ஆகாங்ஷா குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து குடும்பத்தினர் அங்கு சென்று உள்ளனர்.பஞ்சாப் செல்வதற்கு முன். மங்களூரு விமான நிலையத்தில், ஆகாங்ஷாவின் தந்தை சுரேந்திரா நேற்று காலை அளித்த பேட்டி:என் மகளுக்கு ஜெர்மன் சென்று, இரண்டு ஆண்டு கோர்ஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக ஒரு சான்றிதழ் தேவைப்பட்டது. அவர் ஏரோஸ்பேஸ் பொறியியல் படித்த பஞ்சாபின் கல்லுாரியில் கேட்ட போது, சான்றிதழை அனுப்ப முடியாது. நேரில் வந்து பெற்று கொள்ளும்படி, கல்லுாரி நிர்வாகத்தினர் கூறினர். நண்பர் உதவி
எனவே என் மகள் பஞ்சாப் சென்றார். தன் தோழியின் அறையில் தங்கினார். நேற்று (முன்தினம்) காலை 9:00 மணியளவில், அவரது நண்பர், கல்லுாரிக்கு தன் வாகனத்தில், என் மகளை அழைத்து சென்று டிராப் செய்துள்ளார். 11:30 மணியளவில் எனக்கு போன் செய்து, கல்லுாரியில் இருப்பதாக கூறினார். அதன்பின் போன் செய்யவில்லை.நான் அவரை தொடர்பு கொண்டும், போனை எடுக்கவில்லை. அன்று மாலையில் ஜலந்தர் போலீஸ் நிலையத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. அதில் பேசிய போலீசார், 'உங்கள் மகள், கல்லுாரியின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டார். புறப்பட்டு வாருங்கள்' என கூறினார். வேறு தகவல்களை கூறவில்லை. என்ன நடந்தது என, நான் கேட்ட போது, நீங்கள் வாருங்கள் என கூறினார்.சான்றிதழ் விஷயத்தில், என் மகளுக்கு கல்லுாரியில் ஏதோ நடந்துள்ளது. என் மகள் தற்கொலை செய்திருக்கமாட்டார். இது கொலையாகத்தான் இருக்கும் என, சந்தேகிக்கிறோம். இது குறித்து, தீவிரமாக விசாரிக்க வேண்டும். அமிர்தசரஸ் செல்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -