| ADDED : நவ 21, 2025 06:04 AM
பெங்களூரு: ''தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., தாக்கல் செய்யும் விசாரணை அறிக்கை, பெலகாவி கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறினார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: தர்மஸ்தலா வழக்கு குறித்து விசாரிக்கும் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு, குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்பிப்பர். விசாரணை குறித்து அரசுக்கும் அறிக்கை கொடுப்பர். அந்த அறிக்கை, பெலகாவி குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். அறிக்கையில் உள்ளது பற்றி விவாதம் நடத்துவோம். அறிக்கை கையில் கிடைத்த பிறகே வழக்கில் என்ன நடந்தது என்பது பற்றி முழு விபரம் தெரியும். பெங்களூரில் 7 கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்றவர்கள், வாகனங்களை மாற்றி, மாற்றி சென்றுள்ளனர். அவர்களை விரைவில் கைது செய்வோம். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்கின்றனர். அரசு, இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. முதல்வர் மாற்றம் குறித்து கட்சி மேலிடத்திடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திலும் முதல்வர் மாற்றம் பற்றி விவாதிக்கவில்லை. இரண்டரை ஆண்டு காலத்தில், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் பாதி நிறைவேற்றி உள்ளோம். இதில் திரு ப்தி அடைகிறோம். மத்தியில் இருந்து எங்களுக்கு குறைந்த நிதியே கிடைக்கிறது. இதுகுறித்து விவாதித்து அடுத்தகட்ட முடிவு எடுப்போம். நிதி விஷயங்களில் சித்தராமையா அனுபவம் வாய்ந்தவர். மாநிலத்திற்கு என்ன தேவை என்பது தொடர்பான பட்ஜெட்டுகளை இதுவரை தாக்கல் செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.