மேலும் செய்திகள்
தர்மஸ்தலா வழக்கு: நால்வர் 'டிமிக்கி'
28-Oct-2025
பெங்களூரு: தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது. இவ்வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி, தர்மஸ்தலாவின் உஜ்ரே கிராமத்தை சேர்ந்த ராஷ்ட்ரீய ஹிந்து ஜாக்ரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடி, சமூக ஆர்வலர்கள் கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கல்லுாரி மாணவி சவுஜன்யாவின் மாமா விட்டல் கவுடா, சுஜாதா பட் ஆகியோருக்கு சில நாட்களுக்கு முன்பு எஸ்.ஐ.டி., நோட்டீஸ் அனுப்பியது. சுஜாதா பட்டை தவிர, மற்ற நால்வரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால், இவர்கள் கைது செய்யப்படுவர் என கருதப்பட்டது. இதனிடையே இவர்கள் நான்கு பேரும், தர்மஸ்தலா போலீசில் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதி முகமது நவாஸ் முன்னிலையில் நடந்தது. இவர்கள் தரப்பில் வக்கில் பாலன் முன்வைத்த வாதம்: எஸ்.ஐ.டி., அதிகாரிகள் சட்டப்படி விசாரணையை மேற்கொள்ள வேண்டும். சின்னையா புகார் அளித்ததும் போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதற்கு பதிலாக மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி இருக்க வேண்டும். அரசு தரப்பு வக்கீல் ஜெகதீஷா வாதிட்டதாவது: தர்மஸ்தலா வழக்கை தீவிரமாக விசாரிக்கக் கோரி மனுதாரர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மனுதாரர்களுக்கு கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் இருந்தால், முன் ஜாமின் பெற வேண்டுமே தவிர முழு வழக்கிலும் தடை கோரக்கூடாது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முகமது நவாஸ் மனுதாரர்கள் மீது வரும் 12ம் தேதி வரை கட்டாய நடவடிக்கை எடுக்க தடை விதித்தார். அத்துடன் எஸ்.ஐ.டி., விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்தார். ஆலோசனை தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்படும். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். பரமேஸ்வர், உள்துறை அமைச்சர்.
28-Oct-2025