உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தார்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுக்கு ஜாமின் 

 தார்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுக்கு ஜாமின் 

- நமது நிருபர் -: தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலரும், பா.ஜ., பிரமுகருமான யோகேஷ் கவுடா, 2016 ஜூன், 15ம் தேதி உடற்பயிற்சி கூடத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., 2020ல் தார்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னியை கைது செய்தது. மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்த நிலையில், 2021ல் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. தார்வாட்டுக்கு செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்தது. அதனால், 2023 சட்டசபை தேர்தலில், தார்வாட்டுக்கு சென்று பிரசாரம் செய்யாமலேயே வினய் குல்கர்னி வெற்றி பெற்றார். இந்நிலையில், கொலை வழக்கின் சாட்சிகளை வினய் குல்கர்னி மிரட்டுவதாகவும், அவருக்கு விதிக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரியும், மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், வினய் குல்கர்னியின் ஜாமினை ரத்து செய்தது. இதனால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின், அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இம்முறையும் அவரது ஜாமின் மனுவை மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றமும், கர்நாடக உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் சஞ்சய் கரோல், ஏ.ஜி.மாசி விசாரித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வினய் குல்கர்னிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ