உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ‘டிஜி லாக்கர்’ செயலியில் 10ம் வகுப்பு – பி.யு.சி., ‘மார்க் ஷீட்’: நடப்பாண்டு முதல் அமலாகிறது

‘டிஜி லாக்கர்’ செயலியில் 10ம் வகுப்பு – பி.யு.சி., ‘மார்க் ஷீட்’: நடப்பாண்டு முதல் அமலாகிறது

பெங்களூரு: போலி மதிப்பெண் அட்டை முறைகேட்டை தடுக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டு முதல், எஸ்.எஸ்.எல்.சி., – பி.யு.சி., மாணவர்கள், தங்களின் மதிப்பெண் பட்டியலை, மத்திய அரசின், ‘டிஜி லாக்கர்’ செயலி மூலம், தங்கள் மொபைல் போனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள, மாநில கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., – பி.யு.சி., தேர்வு முடிவுகள் வெளியான பின், அசல் மதிப்பெண் அட்டையை பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. பெறப்படும் அந்த மதிப்பெண் அட்டை தொலைந்து விடுமோ, கிழிந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே மாணவர்களும், பெற்றோரும் இருப்பர்.

கல்வி துறை முடிவு

இதை தவிர்க்கும் வகையில், நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு டிஜிட்டல் மதிப்பெண் அட்டைகளை வழங்க கல்வி துறை முடிவு செய்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., – பி.யு.சி., மாணவர்கள், தங்களின் மதிப்பெண் பட்டியலை, மத்திய அரசின், டிஜி லாக்கர் செயலி மூலம் நேரடியாக பெற்று கொள்ளலாம். இந்த டிஜிட்டல் வடிவத்தில் பெறப்படும் மதிப்பெண் பட்டியல்கள் அதிகாரபூர்வமாக செல்லுபடியாகும். இதனை வைத்து கல்லுாரி, அரசு, தனியார் நிறுவனங்களில் நேர்காணல் என அனைத்து இடங்களிலும் அசல் ஆவணம் போன்று பயன்படுத்தலாம். ஒருவேளை மதிப்பெண் பட்டியல் தொலைந்துவிட்டால், நகல் பெறுவதற்காக, கல்வி வாரிய அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. டிஜிட்டல் மதிப்பெண் பட்டியலுடன், மாணவர்களின் அனைத்து கல்வி பதிவுகளையும் ‘ஏ.பி.ஏ.ஏ.ஆர்., ஐ.டி.,’ எனும் தானியங்கு நிரந்தர கல்வி கணக்கு பதிவில் இணைக்கும் முறையை கல்வி துறை உருவாக்கி வருகிறது. ஏ.பி.ஏ.ஏ.ஆர்., ஐ.டி.,யில் பதிவு செய்யும்போது, மாணவர்களுக்கு 12 இலக்க தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும். இதன் மூலம் ஒரு மாணவரின் முழுமையான கல்வி பதிவுகள் அனைத்தும், ஒரே டிஜிட்டல் தளத்தில் பாதுகாப்பாக இருக்கும்.

பயன்பாடு

எதிர்காலத்தில் மாணவர்கள், உயர்கல்விக்காக கல்லுாரிகளில் சேரும்போதோ அல்லது கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும்போதோ இதை பயன்படுத்தி கொள்ளலாம். சமீப காலமாக வேலை பெறவோ அல்லது உயர் கல்வியில் சேரவோ, மாணவர்கள் போலி மதிப்பெண் அட்டைகளை தயாரிக்கும் வழக்குகள், கல்வி துறைக்கு சவாலாக மாறி உள்ளன. இதை தவிர்க்கவும், கல்வி துறை இதை செயல்படுத்த முடிவு செய்து உள்ளது. இது குறித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறுகையில், ‘‘மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் எளிதாகவும், வெளிப்படையாகவும் வழங்க, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. புதிய டிஜிட்டல் முறையை செயல்படுத்தும்போது ஏற்படக்கூடிய தொழில்நுட்ப சிக்கல்கள் முன்கூட்டியே கண்டறியப்பட்டு, அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ‘‘இந்த டிஜிட்டல் புரட்சி, மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வர பிரசாதமாக அமையும்,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ