மெட்ரோவில் டிஜிட்டல் பாஸ் இன்று முதல் அறிமுகம்
பெங்களூரு: பெங்களூரில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய, கவுன்டர்களில் சென்று பாஸ் எடுக்கும் நடைமுறையில், மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இன்று முதல் டிஜிட்டல் முறையில் பாஸ் எடுத்து கொள்ளலாம். பெங்களூரு மெட்ரோ ரயில்களில், அதிகபட்சமாக 5 நாட்கள் பாஸ் எடுத்து பயணிக்கும் நடைமுறை உள்ளது. இதற்காக ரயில் நிலைய கவுன்டர்களில் சென்று, ஸ்மார்ட் கார்டு பெறும் போது 50 ரூபாய், வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். வைப்பு தொகையுடன் சேர்த்து ஒரு நாளுக்கு 300 ரூபாய்; மூன்று நாளுக்கு 600 ரூபாய்; ஐந்து நாளுக்கு 900 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஐந்து நாட்களுக்கு பின் ஸ்மார்ட் கார்டை திரும்பி கொடுத்து, வைப்பு தொகையாக செலுத்தப்பட்ட 50 ரூபாயை திரும்ப பெற்று கொள்ளலாம். தற்போது பாஸ் எடுக்கும் நடைமுறையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் மாற்றம் செய்து உள்ளது. இன்று முதல் டிஜிட்டல் முறையில், பாஸ் எடுத்து கொள்ளும் வசதி அறிமுகமாகி உள்ளது. நம்ம மெட்ரோ செயலியில் சென்று கியு.ஆர்.கோடு மூலம், பாஸ் எடுத்து கொள்ளலாம். இதற்கு வைப்பு தொகை எதுவும் செலுத்த வேண்டியது இல்லை. டிஜிட்டல்மயத்தை ஊக்குவிக்கவும், கவுன்டர்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கவும், மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த முயற்சியை முன்எடுத்து உள்ளது. 7வது ரயில் இயக்கம் பெங்களூரின் ஆர்.வி.ரோடு -- பொம்மசந்திரா இடையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி டிரைவர் இல்லாத மெட்ரோ சேவை துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த பாதையில் 3 ரயில்கள் 25 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்டன. தற்போது ஆறு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று முதல் ஆர்.வி.ரோடு -- பொம்மசந்திரா இடையில் ஏழாவது மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. இதன்மூலம் ரயில்கள் இயங்கும் நேரத்திற்கு இடையில் இருந்த இடைவெளி 13 நிமிடத்தில் இருந்து 10 நிமிடமாக குறைய உள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் 15 நிமிடங்களாக இருந்த இடைவெளி 14 நிமிடமாக குறைகிறது என்று, மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறி உள்ளது.