வரதட்சணை கொடுமை கர்ப்பிணி தற்கொலை
கலபுரகி: காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரின் கொடுமையால், கர்ப்பிணியாக இருந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார். கலபுரகி மாவட்டத்தின் அவுராத் பி கிராமத்தில் வசித்தவர் ஸ்ருதி, 22. இவர் இதே கிராமத்தை சேர்ந்த கோபால்சிங் திவாரியை காதலித்தார். இரண்டு குடும்பத்தினரின் சம்மதத்துடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. தற்போது ஸ்ருதி நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். திருமணமான மூன்றே மாதங்களில், கோபால் சிங் திவாரியின் குணம் மாறியது. குடி, சூதாட்டம் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையானார். பல இடங்களில் கடன் வாங்கினார். தன் நிலத்தையும் விற்று விட்டார். மனைவியை தாய் வீட்டில் இருந்து, பணம் வாங்கி வரும்படி தொந்தரவு கொடுத்தார். லட்சக்கணக்கான ரூபாய் கடன் இருந்ததால், குடியிருக்கும் வீட்டை விற்கவும் முடிவு செய்தார். வீட்டை விற்க சம்மதித்து, கையெழுத்து போடும்படி மனைவியை கொடுமைப்படுத்தினார். வீட்டை விற்க மனைவி எதிர்ப்பு தெரிவித்தார், அவரை தாக்கியதுடன், தகாத வார்த்தைகளை கூறி திட்டினார். இதனால் மனம் நொந்த ஸ்ருதி, தாய் வீட்டுக்கு சென்றார். நேற்று முன் தினம் அங்கு வந்த கணவர், மீண்டும் மனைவியுடன் தகராறு செய்து, திட்டினார். இதனால் மனம் நொந்த ஸ்ருதி, நேற்று அதிகாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கலபுரகி மகளிர் போலீஸ் நிலையத்தில், பெற்றோர் புகார் அளித்துள்ளனர். கோபால் சிங் திவாரி கைது செய்யப்பட்டார்.