உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முன்கூட்டியே துவங்கிய பருவமழை: பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு 

முன்கூட்டியே துவங்கிய பருவமழை: பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு 

பெங்களூரு : கர்நாடகாவில் ஒரு வாரத்திற்கு முன்கூட்டியே துவங்கி உள்ள தென்மேற்கு பருவமழை தனது வேலையை காட்ட ஆரம்பித்து உள்ளது. பெண் உட்பட 3 பேர் உயிரிழந்து உள்ளனர். பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. காளி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி நடக்கிறது.கர்நாடகாவில் வழக்கமாக மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் தான் தென்மேற்கு பருவமழை துவங்கும். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்பே தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, குடகு, ஹாசனில் கனமழை பெய்து வருகிறது.சிக்கமகளூரு ஜெயபுரா அருகே கோக்ரே கிராமத்தில் பெய்த கனமழைக்கு ராட்சத மரம் வேரோடு சாய்ந்து, ஆட்டோ மீது விழுந்தது. ஆட்டோ டிரைவர் சிட்லமனே கிராமத்தின் ரத்னாகர், 46 உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த ஆண்டு பருவமழைக்கு முதல் பலி இது தான்.சிக்கமகளூரு டவுன், கலசா, கொப்பா, பாலேஹொன்னுார், ஆல்துார், சிருங்கேரி, என்.ஆர்.புரா பகுதியில் நேற்று முன்தினத்தில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்து உள்ளன.குடகின் விராஜ்பேட் தாலுகா ஆர்.ஜி.கிராமத்தில் மழைக்கு தென்னை மரம் சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது. வீட்டின் முன்பு நின்ற கவுரி, 50 என்பவர் மரத்தின் அடியில் சிக்கி இறந்தார். உத்தர கன்னடாவின் கார்வார் சுங்கேரி கிராமத்தில் கனமழையால், காளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றில் குளித்து கொண்டு இருந்த சந்தோஷ், 47 என்பவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இறந்தார். அவரது உடலை தேடும் பணி நடக்கிறது.

மலை பாதையில் நிலச்சரிவு

சிக்கமகளூரு அருகே முல்லையனங்கிரியில் உள்ள பாபாபுடன்கிரிக்கு செல்லும், மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க மணல் மூட்டைகளை, பொது பணி துறையினர் அடுக்கி வைத்து வருகின்றனர். யாரும் பாபாபுடன்கிரிக்கு சுற்றுலா வர வேண்டாம் என்று, மாவட்ட நிர்வாகம் கூறி உள்ளது. இதுபோல ஹாசன் சக்லேஸ்பூர் பகுதியில் பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

ஆற்றில் பாய்ந்த கார்கள்

சிக்கமகளூரு மூடிகெரே தாலுகா பனகல் ராமண்ணா காந்தி, சக்கமக்கி ஆகிய இடங்களில், கட்டுப்பாட்டை இழந்து இரண்டு கார்கள் ஹேமாவதி கிளை ஆற்றில் பாய்ந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை. கார்கள் கயிறு கட்டி வெளியே இழுக்கப்பட்டது.

சுவர் இடிந்தது

கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் மங்களூரு, பன்ட்வால், புத்துார், பெல்தங்கடி பகுதியில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. புத்துாரில் நகரசபை அலுவலக காம்பவுன்ட் சுவர் இடிந்து, மூன்று ஆட்டோக்கள் மீது விழுந்தது. மூன்று பெண்கள் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

வெள்ளப்பெருக்கு

மங்களூரு டவுன் அட்டியார் பகுதியில் மழை, சாக்கடை நீர், கிணற்றில் கலந்ததால், குடிநீருக்காக கிணற்று தண்ணீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். பெல்தங்கடியில் கனமழையால் நேத்ராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் பாக்கு தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. பாக்கு மரங்கள் அழுகும் நிலையில் உள்ளன.கனமழையால் கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றமாக உள்ளது. சுற்றுலா பயணியர் யாரும் கடற்கரை பக்கம் செல்ல வேண்டாம் என்று அறிவிப்பு வெளியான போதும், சுற்றுலா பயணியர் கண்டுகொள்ளவில்லை. மல்பே பகுதியில் கடற்கரை பாறை மீது நின்று, சுற்றுலா பயணியர் செல்பி எடுத்தனர்.

விளைநிலங்கள்

வடமாவட்டங்களான ஹாவேரி, பெலகாவி, கதக்கிலும் நேற்று கனமழை பெய்தது. ஹாவேரியில் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால், நெற்பயிர்கள் அடித்து செல்லப்பட்டன. கதக், ரோன், லட்சுமேஸ்வர், முண்டரகியிலும் விளைநிலங்கள் சேதம் அடைந்தன. பெங்களூரில் நேற்று காலையில் இருந்தே, வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. மதியம் பல இடங்களில் சாரல் மழை பெய்தது. இரவில் சில பகுதிகளில் கனமழை பெய்தது.

பாகமண்டலாவில் வெள்ளம்

குடகில் பெய்து வரும் மழையால் பாகமண்டலா திரிவேணி சங்கமத்தில் உள்ள, மலர் தோட்டத்தை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மழைக்கு மத்தியிலும் குடகுக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை