உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தனியார் பள்ளிகளில் நன்கொடை கல்வித்துறை கடும் எச்சரிக்கை

 தனியார் பள்ளிகளில் நன்கொடை கல்வித்துறை கடும் எச்சரிக்கை

பெங்களூரு: 'தனியார் பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோரிடம், 'நன்கொடை' வாங்கினால், 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும்' என கல்வி துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. கர்நாடகாவில் 2026 - 27ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை, ஜூலை 31ம் தேதியுடன் முடிந்தது. இந்தாண்டு 96 லட்சம் மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதுவே கடந்தாண்டு ஒரு கோடியாக இருந்தது. இது தொடர்பாக, கல்வி துறை கமிஷனர் விகாஸ் கிஷோர் சுரல்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பாண்டு 2026 - 27ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை காலம் முடிந்துவிட்டது. ஆனாலும், சில தனியார் பள்ளிகள், நன்கொடை பெற்றுக் கொண்டு, மாணவர்களை சேர்த்து வருகின்றனர். கல்வி துறை சட்டம், விதிகளின்படி, தனியார் பள்ளிகள், மாணவர்களிடம் இருந்தோ அல்லது பெற்றோரிடம் இருந்து நன்கொடை வசூலிப்பது சட்ட விரோதமாகும். அதுபோன்று, மாணவர்கள், அவர்களின் பெற்றோரின் கல்வி தகுதியை சோதிப்பதும் தவறு. ஆனால் சில தனியார் பள்ளிகள், நன்கொடை பெறுவதாக, தகவல்கள் வந்துள்ளன. இனி தனியார் பள்ளிகள் நன்கொடை பெற்றது நிரூபிக்கப்பட்டால், அத்தகைய பள்ளிகளுக்கு 10 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும். அதுபோன்று, மாணவர் சேர்க்கையின் போது அவர்களிடமும், அவர்களின் பெற்றோரிடமும் கல்வி அறிவு குறித்து சோதிக்கக் கூடாது. அவ்வாறு பள்ளிகள் சோதிப்பது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி துணை இயக்குனர், கள கல்வி அலுவலர், அப்பள்ளிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பர். மீண்டும் அதே தவறை செய்தால், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை