தெருநாய் கடித்து முதியவர் பலி
பெங்களூரு : தெரு நாய்களுக்கு, இறைச்சி உணவு வழங்க பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்ட நிலையில், தெருநாய் கடித்து, குதறியதில் முதியவர் ஒருவர் பலியானார். நாட்டிலேயே முதன் முறையாக தெரு நாய்களுக்கு சிக்கன், முட்டை உணவு வழங்க பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மாநகராட்சியின் எட்டு மண்டலங்களில், தினமும் தலா 600 முதல் 700 தெரு நாய்களுக்கு உணவளிக்க, 2.80 கோடி ரூபாய் செலவிடவுள்ளது. இதற்காக டெண்டர் அழைத்துள்ளது. இத்திட்டத்துக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மக்களின் வரிப்பணத்தை தெரு நாய்களுக்கு உணவளித்து வீணாக்குவது சரியா என்ற கேள்வி எழுந்தது. தெரு நாய்களால் பொது மக்கள் ஏற்கனவே பல தொந்தரவுகளை அனுபவிக்கின்றனர். இறைச்சி உணவு அளிப்பதன் மூலம், நாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முற்பட்டுள்ளதாக, மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தெரு நாய்க்கு, முதியவர் ஒருவர் உயிரிழந்தார். பெங்களூரின், கொடிகேஹள்ளியில் வசித்தவர் சீதப்பா, 71. இவர் நேற்று காலை, நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தெரு நாய்கள் அவர் மீது பாய்ந்து கடித்தன. இதில் அவரது உடலின் பல பாகங்களை கடித்தன. இதை கவனித்த அப்பகுதியினர், நாய்களை விரட்டி முதியவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரது குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.