மழைக்கு மரம் விழுந்து முதியவர் பலி
குடகு, : குடகில் பெய்த கனமழைக்கு, மரம் சாய்ந்து விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார். மங்களூரில் கடலில் தண்ணீர் நிறம் மாறியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கர்நாடகாவில் முன்கூட்டியே துவங்கி உள்ள தென்மேற்கு பருவமழையால் கடலோர, மலைநாடு, வடமாவட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. குடகு விராஜ்பேட் தாலுகா படகா பனங்காலா கிராமத்தில் நேற்று காலை கனமழை பெய்தது. வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்த விஷ்ணு பெல்லியப்பா, 65 என்பவர் மீது மரம் சாய்ந்து விழுந்தது. உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். 200 குடும்பம்
மங்களூரு அருகே ராமகுஞ்சா பகுதியில் நேற்று காலை ஒரு கார் நின்றது. காரின் முன்பு 3 பேர் நின்றிருந்தனர். அருகில் இருந்த மரம் சாயும் சத்தம் கேட்டு அங்கிருந்து நகர்ந்தனர். சாய்ந்த மரம் விழுந்து, கார் முற்றிலும் சேதம் அடைந்தது. மங்களூரு டவுன் ஜல்லிகுட்டே பகுதியில் பெய்து வரும் கனமழையால், அப்பகுதியில் உள்ள மலையில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது.இதனால் அடிவாரத்தில் இருக்கும் 200 குடும்பத்தினர் பீதியில் உள்ளனர். மண் சரிந்து வீட்டின் மீது விழுந்து பெரிய அபாயத்தை ஏற்படுத்தி விடுமோ; வயநாடு போன்று நடந்து விடுமோ என்று தினமும் உயிரை கையில் பிடித்து கொண்டு இருப்பதாக மக்கள் கூறினர். 'ரெட் அலெர்ட்'
கனமழையால் மங்களூரில் உள்ள கடலில், தண்ணீரின் நிறம் மாறி உள்ளது. கடல் தண்ணீர் செம்மண் கலரில் காட்சி அளிப்பதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு, ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. சிக்கமகளூரு மாவட்டத்தில் இடைவிடாது பெய்யும் கனமழையால், மூடிகெரே தாலுகா பாலுார் என்ற கிராமத்தில் கீதா என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டிற்குள் இருந்த 3 பேரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். தொடர் கனமழையால் ஹேமாவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோரம் இருக்கும் பாக்கு, காபி தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்த விடுமோ என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். தொடர் கனமழையால் சிக்கமகளூரில் இருந்து மங்களூரு செல்லும் ஷிராடி வனப்பகுதி சாலையில் பாறைகளில் திடீர் நீருற்றுகள் உருவாகி உள்ளன. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தி செல்பி எடுக்கின்றனர். சிக்கமகளூரு, தட்சிண கன்னடா மாவட்டங்களில் உள்ள ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்து உள்ளது. மஹாராஷ்டிரா பகுதியில் பெய்து வரும் மழையால் அங்கு உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் பாகல்கோட் கிருஷ்ணா ஆறு; பெலகாவி மாவட்டங்களில் ஓடும் வேதகங்கா, துாத்கங்கா ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த ஆண்டு பெய்த பருவமழையால், கார்வார் அங்கோலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மண்சரிவில் சிக்கி காளி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட, லாரி டிரைவர் உடல் ஒரு மாதத்திற்கு பின் மீட்கப்பட்டது. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த உத்தர கன்னடா மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. ஹாசனில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் நேற்று ஆய்வு செய்தார். 'முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை' என்று அரசை சாடினார்.