8 அரசியல் கட்சிகள் நீக்கம் தேர்தல் கமிஷன் அதிரடி
பெங்களூரு: பெங்களூரு நகர் மாவட்டத்தில், பதிவு செய்தும் செயல்படாத எட்டு அரசியல் கட்சிகளை, பதிவு பட்டியலில் இருந்து நீக்க, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.இது குறித்து, பெங்களூரு நகரின் கூடுதல் தேர்தல் அதிகாரி ஜெகதீஷ் கூறியதாவது:மக்கள் பிரதிநிதிகள் சட்டம் - 1951ன், பிரிவு 29 (ஏ)ன் கீழ், பதிவு செய்து கொண்ட பல கட்சிகள், செயல்படாமல் உள்ளன. 'நம்ம காங்கிரஸ், பிரஜா ரைதா, கல்யாண கிராந்தி, பாரதிய அம்பேத்கர் ஜனதா, ரக்ஷக சேனா, மஹிளா பிரதானா, அம்பேத்கர் ஜனதா, கர்நாடக பிரஜா விகாஸ்' ஆகிய எட்டு கட்சிகள் செயல்படவில்லை.இதனால், இவற்றின் முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை. இக்கட்சிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக, எந்த லோக்சபா, சட்டசபை, இடைத்தேர்தல்களிலும் போட்டியிடவில்லை. எனவே இக்கட்சிகளை பதிவு பட்டியலில் இருந்து நீக்க, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.செயல்படாதது குறித்து விளக்கமளிக்க, இக்கட்சிகளுக்கு தேவையான கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 18ம் தேதி, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிகளின் அலுவலகத்தில், விசாரணை நடக்க உள்ளது. அன்றைய தினம் அந்தந்த கட்சிகளின் தலைவர்கள், பொது செயலர்கள், நிர்ணயித்த ஆவணங்களுடன் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும். இது குறித்து, எட்டு கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.நிர்ணயித்த நாளில் கட்சியினர் ஆஜராகி, ஆவணங்களை அளிக்காவிட்டால், அந்த கட்சிகள் விளக்கம் அளிக்கவில்லை என, கருதப்படும். அதன்பின் அக்கட்சிகளை தொடர்பு கொள்ளாமலேயே, தேர்தல் ஆணையம் அடுத்தகட்ட முடிவை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.