மின் நுகர்வு கட்டுப்பாடு ரூ.850 கோடி அபராதம் வசூல்
பெங்களூரு: கடந்த இரண்டு நிதியாண்டுகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக மின்சாரத்தை பயன்படுத்தியதால் பெஸ்காம் 850 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பெங்களூரில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என பெஸ்காம் எனும் பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாததால், பலரும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளனர். இதனால், இவர்களின் மின்கட்டண தொகை இரட்டிப்பாக வசூலிக்கப்படுகிறது. கடந்த இரண்டு நிதியாண்டுகளில் அபராதம் செலுத்தியோர் மூலம் பெஸ்காமிற்கு 850 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2023- - 24ல், 397.18 கோடி ரூபாயும்; 2024 - -25ல் ஜனவரி வரை 446.67 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.பெஸ்காம் அதிகாரிகள் கூறியதாவது:பல பழைய பங்களாக்கள், வீடுகளில் அனுமதிக்கப்பட்ட மின்சுமை 2 முதல் 3 கிலோ வாட்டாகவே உள்ளது. ஆனால், அவர்கள் ஏ.சி., டி.வி., வாஷிங் மெஷின் உட்பட பல எலக்ட்ரானிக் சாதனங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துகின்றனர்.இதனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக கோடையில் தான் அதிக அளவில் நுகர்வு உள்ளது. அதிக மின் பயன்பாடு கொண்ட சாதனங்களை ஒரே நேரத்தில் இயக்குவதை தவிர்த்தால், இது போன்ற பிரச்னை ஏற்படாது. குறிப்பாக, இது போன்று அபராதம் செலுத்துவது முதியவர்களாகவே உள்ளனர். அவர்களிடையே மின்சார உபயோகம் குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணமாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.