பி.எம்.டி.சி., பஸ்சை வழிமறித்த யானை
பெங்களூரு: சமீப நாட்களாக காட்டு யானைகள், ஊருக்குள் வந்து மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் நடக்கின்றன. காட்டு யானை ஒன்று பி.எம்.டி.சி., பஸ்சை வழி மறித்ததால், பயணியர் கிலி அடைந்தனர்.பெங்களூரு, கனகபுரா சாலையின் கக்கலிபுரா அருகில் குல்லஹட்டி கிராமத்தில் நேற்று காலை பி.எம்.டி.சி., பஸ், பயணியருடன் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒற்றை காட்டு யானை, சாலை குறுக்கே வந்து பஸ்சை வழி மறித்தது.பஸ்சில் இருந்த பயணியர், ஓட்டுநர், நடத்துநர் கிலி அடைந்தனர். சிறிது நேரம் உயிர் பயத்துடன் பரிதவித்தனர். சாலையில் யானை வழி மறித்து நிற்பது குறித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.அப்போது யானை பஸ்சை ஒரு முறை சுற்றி வந்தது. அதன்பின் மீண்டும் பஸ்சின் பின் புறம் நோக்கி சென்றது. அந்த நேரத்தை பயன்படுத்தி, தப்பித்தோம், பிழைத்தோம் என, பஸ்சை வேகமாக இயக்கி ஓட்டுநர் அங்கிருந்து சென்று விட்டார். அதன்பின் அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள், யானையை பன்னரகட்டா தேசிய பூங்காவுக்கு விரட்டினர்.