பறவைக்காய்ச்சல் பீதியால் அவசர ஆலோசனை கோழிகள், முட்டைகளுக்கு தடைவிதிப்பு
பெங்களூரு: பெங்களூரில் பறவைக்காய்ச்சல் பரவியதால், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய சிறப்பு கமிஷனர், நேற்று அவசர ஆலோசனை நடத்தி, பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பெங்களூரின் புறநகரின் ஹெசரகட்டாவில் உள்ள அரசு சார்ந்த கோழிப்பண்ணையில், பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உஷாரான சுகாதாரத்துறை, பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. பண்ணையில் உள்ள ஆயிரக்கணக்கான கோழிகள், பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டன. ஹெசரகட்டா கோழிப்பண்ணையில் இருந்து, ஒரு கி.மீ., சுற்றுப்பகுதி, நோய் பாதிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் ஜி.பி.ஏ.,வும் நடவடிக்கை எடுத்துள்ளது. அவசர ஆலோசனை பறவை காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து, ஜி.பி.ஏ., சுகாதார பிரிவு சிறப்பு கமிஷனர் சுரல்கர் விகாஸ் கிஷோர், நேற்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின் அவர் அளித்த பேட்டி: பறவை காய்ச்சல் வைரசால் பரவும் தொற்று நோயாகும். இது கோழி, கிளி, வாத்து உட்பட பல்வேறு பறவைகளில் தென்படும். தொற்று ஏற்பட்ட பறவைகளின் சிறுநீர், மலம் மூலமாக பரவும். பரிசோதனை சில நேரங்களில் மனிதர்களுக்கும், இந்த தொற்று பரவும். எனவே எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பறவைகளிடம் இருந்து விலகி இருங்கள். காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு பிரச்னை, கண் வலி போன்றவை, பறவைக்காய்ச்சலின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஹெசரகட்டா சுற்றுப்பகுதிகளில், செக்போஸ்ட் அமைத்து, கோழிகள் கொண்டு செல்வது தடுக்கப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து கோழிகள், முட்டைகள் கொண்டு வருவது நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.